லண்டன்: பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய பிரதமர் ஆக ஆண்டி பர்ன்ஹம் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு துறையின் இணை அமைச்சராக இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐநா உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கான பொறுப்பு, அவரது அமைச்சகத்திடம் உள்ளது. மேலும், துணை கொறடாவாகவும் உமா செயல்பட உள்ளார்.
பெருமிதம்
உமா குமரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது பெருமை அளிக்கிறது. உலகளவில் நிலையற்ற இந்த நேரத்தில் பிரிட்டனின் குரலும், சர்வதேச தலைமைத்துவமும் தற்போது கவனம் பெறுகிறது எனத் தெரிவித்து உள்ளார்.
யார் இவர்
உமா குமரனின் பெற்றோர், இலங்கையை சேர்ந்தவர்கள். 1980 களில் நடந்த உள்நாட்டு போரின் போது அங்கிருந்து வெளியேறி பிரிட்டனில் குடியேறினர்.லண்டனில் பிறந்த உமா, ஹாரோ பகுதியில் வளர்ந்தார். குயின்மேரி பல்கலையில் பட்டம் பெற்ற இவர், தேசிய சுகாதார சேவை, பார்லிமென்ட் ஆய்வாளர், மற்றும் சர்வதேச உறவுகளுக்கான இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். கெய்ர் ஸ்டார்மரின் கீழ், பார்லிமென்ட் விவகாரங்களுக்கான துணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு பிரிட்டன் பார்லிமென்ட்டுக்கு நடந்த பொதுத்தேர்தலில் ஸ்டான்போர்டு மற்றும் போ என்ற தொகுதியில் வெற்றி பெற்றார். புதிதாக உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் 11, 634 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன் வாயிலாக பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்வான இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. தற்போது அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
