பிரிட்டன் புதிய பிரதமரானார் ஆன்டி பர்ன்ஹாம்

லண்டன்: முன்னாள் மேயரான ஆன்டி பர்ன்ஹாம், பிரிட்டனின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கடந்த மே மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்தது. இதன் காரணமாக ஆளும் தொழிலாளர் கட்சிக்குள் பூசல் வெடித்தது. தொடர்ந்து நடந்த பார்லி இடைத்தேர்தல் ஒன்றில் போட்டியிட்ட கட்சியின் மூத்த தலைவர் ஆன்டி பர்ன்ஹாம், மிக அதிகப்படியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து கட்சிக்குள், பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிரான குரல்கள் வலுத்தன. பர்ன்ஹாம் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கினர். வேறு வழியில்லாத நிலையில், கட்சி தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமர் பொறுப்புகளில் இருந்து ஸ்டார்மர் விலகுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து நடந்த கட்சி கூட்டத்தில், தொழிலாளர் கட்சியின் தலைவராக, பர்ன்ஹாம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொழிலாளர் கட்சியின் 403 எம்.பி.,களில் 379 பேரின் பெரும் ஆதரவை பெற்ற பர்ன்ஹாம் புதிய தலைவராகவும், பிரதமராகவும் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.

மன்னர் சார்லசை சந்தித்த ஸ்டார்மர், தன் ராஜினாமா கடிதத்தை முறைப்படி வழங்கினார். அதன்பின், புதிய அரசு அமைக்க பர்ன்ஹாமுக்கு மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து பிரதமராக பர்ன்ஹாம் நியமிக்கப்பட்டார். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு சென்ற பர்ன்ஹாம், அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

2016ம் ஆண்டிற்கு பின், 10 ஆண்டுகளில் பிரிட்டனின் 7வது பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவியேற்று உள்ளார். இவர் கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயர்; ‘வடக்கு மன்னர்’ என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source link