பிரேசிலியா: பிரேசில் அதிபர் தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றி பெற்றார். வரும் ஜனவரியில் அவர் 4-வது முறையாக பிரேசில் அதிபராக பதவியேற்க உள்ளார்.
தென்அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (80) மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக லிபரல் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகன் ஃப்ளாவியோ போல்சனாரோ (45) களமிறங்கினார். இந்த தேர்தலில் லூலா டா சில்வா 45.16% வாக்குகளும் ஃப்ளாவியோ போல்சனாரோ 47.03% வாக்குகளும் பெற்றனர்.
பிரேசில் சட்ட விதிகளின்படி எந்த வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெறாத நிலையில் கடந்த 25-ம் தேதி மீண்டும் மறுதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 51.76% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். போல்சனாரோவுக்கு 48.24% வாக்குகள் மட்டுமே கிடைத்தன. லூலா டா சில்வா கடந்த 2003-ம் ஆண்டில் முதல்முறையாக பிரேசில் அதிபராக பதவியேற்றார்.
கடந்த 2007-ம் ஆண்டில் 2-ம் முறை அதிபராக பதவி வகித்தார். கடந்த 2023-ல் 3-வது முறை அதிபராக பதவியேற்றார். தற்போதைய தேர்தல் வெற்றி மூலம் அடுத்த ஆண்டு ஜன.5-ல் லூலா டா சில்வா 4-வது முறையாக பிரேசில் அதிபராக பதவியேற்க உள்ளார்.
அமெரிக்காவுக்கு ஏமாற்றம்
இடதுசாரி தலைவரான பிரேசில் அதிபர் சில்வா, அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறார். தற்போதைய தேர்தலில் போல்சனாரோவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தார். ஆனால் அவர் தோல்வியைத் தழுவியிருப்பது அமெரிக்காவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
அதிபர் லூலா டா சில்வா, பிரிக்ஸ் கூட்டமைப்பு மற்றும் குளோபல் சவுத் கூட்டமைப்பின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அமெரிக்காவின் டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய நாணயத்தை வெளியிடவும் அவர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் இந்தியா, பிரேசில் இடையிலான வர்த்தக, ராஜ்ஜியரீதியிலான உறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “பிரேசில் மறு தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்ற எனது நண்பரும் அதிபருமான லூலாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பன்முகத்தன்மை கொண்ட இந்தியா – பிரேசில் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
நாம் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவோம். வளரும் நாடுகளின் நலன்களை முன்னிறுத்துவோம். அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ மிக்க, நிலைத்தன்மைக் கொண்ட உலகை நோக்கி பணியாற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.
