பிரேசிலின், அதிபருக்கான தேர்தலில் இடதுசாரி தலைவரான ’லுயிஸ் இனாசியோ லூலா டா சில்வா’ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அத்தேர்தலில் முறைகேடு நடந்திருக்கலாம்? எனக் குற்றம்சாட்டியுள்ளது உலக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நடந்து முடிந்த பிரேசில் அதிபர் தேர்தலில், 51.79% வாக்குகளைப் பெற்று லூலா டா சில்வா வெற்றி பெற்று, 4-வது முறையாக அதிபராகத் தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட, வலதுசாரி வேட்பாளர் பிளாவியோ போல்சனாரோ 48.21% வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஆவார்.
இந்த தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்க மறுத்துள்ள பிளாவியோ, தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே போல, தனது ஆதரவு பெற்ற வேட்பாளர் பிளாவியோ தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தல் மற்றும் முடிவுகள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். அதாவது, பிரேசில் தேர்தல் குறித்துப் பேசிய ட்ரம்ப், வாக்குப் பதிவு நேரத்தை நீட்டித்த பிரேசில் உச்ச நீதிமன்றத்தின் முடிவும், வாக்குகள் எண்ணப்பட்ட விதமும் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், அதனால் தேர்தல் ’முறைகேடாக’ நடந்திருப்பது போலத் தோற்றமளிப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்தவொரு ஆதாரத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இவர்களது குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என, பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் மறுப்பு தெரிவித்துள்ளார்.
