நடிகர் ராகவா லாரன்ஸ், தனது அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் விரைவில் அரசியலில் களம் இறங்கவுள்ளதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த சூழலில், லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் எனும் அறக்கட்டளை தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, பெண்களுக்கு இலவச பட்டுப்புடவைத் திட்டத்தை தொடங்கவுள்ளதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆரம்பித்து இன்றோடு 20 ஆண்டுகள் முடிவடைகிறது. மக்கள் சேவைக்கு வந்து 20 வருடம் ஆகிவிட்டது. இந்த அறக்கட்டளை மூலமாக நான் டான்ஸ் மாஸ்டராக இருக்கும் போது மற்றவர்களிடம் கேட்டு சில உதவிகள் செய்திருக்கிறேன். அதன் பிறகு ஹீரோவாக நல்ல இடத்துக்கு வந்த பிறகு என்னுடைய சொந்த பணத்திலேயே உதவி செய்கிறேன். இந்த 20 வருடத்தில் என்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கும் சமூகத்துக்கும் உதவி செய்து வருகிறேன்.. ரொம்ப நாளாக ஒரு ஆசை இருந்தது, அது என் ஆசை இல்லை, ஒரு அம்மாவின் ஆசை. அதை இன்றில் இருந்து ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன்.
டிராக்டர் கொடுப்பதற்காக ஒரு இடத்திற்கு சென்றிருந்தேன். அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு அம்மா என்னிடம் வந்து, ‘தம்பி ஒரு உதவி’ என கேட்டார். என்னவென்று கேட்டபோது அவர் கேட்பதற்கு வெட்கப்பட்டு ஒரு கடிதத்தை கொடுத்தார். நான் அந்த கடிதத்தை என்னுடைய அசிஸ்டென்டை படிக்க சொன்னேன். அதில், எல்லா விஷேங்களுக்கும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் பட்டுப்புடவை அணிந்து செல்ல வேண்டும் என்பது ஆசை, ஆனால் அவரிடம் பட்டுப்புடவையே இல்லை, அதனால் ஒரு பட்டுப்புடவை வாங்கி தரமுடியுமா? என்று குறிப்பிட்டிருந்தார். அதை கேட்கும் போது என்னுடைய அம்மா நியாபகம் வந்தது. நான் முதன்முதலில் சம்பாதித்த பணத்தில் என் அம்மாவுக்கு பட்டுப்புடவை தான் வாங்கிக் கொடுத்தேன்.
அன்றில் இருந்து இந்த பட்டுப்புடவை என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. பல நிகழ்ச்சிகளுக்கு நான் போகும் போது நிறைய பெண்கள் அழுக்கு டிரஸுடன் தான் வருவார்கள். அதனால் இந்த 20 வருடம் முடியும் இந்த நேரத்தில் லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக என் சொந்த பணத்தில் பட்டுப்புடவை திட்டம் என்று ஒன்றை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். வருகிற 29ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள் வருகிறது. அந்த நாளில் இந்த திட்டத்தை தொடங்க இருக்கிறேன். முதலில் 5,000 பெண்களுக்கு பட்டுப்புடவை கொடுக்க இருக்கிறேன். என் கையில் பணம் இருக்கிற வரைக்கும் அதிகளவில் எவ்வளவு பட்டுப்புடவை வாங்க முடியுமோ அதை செய்ய இருக்கிறேன். அதற்கு உங்களுடைய ஆசிர்வாதம் தேவை” என்று கூறினார்.
