பிறந்த குழந்தைக்கும் இனி பென்ஷன்: மாற்றுத் திறனாளி ஓய்வூதியத் திட்டத்தில் வெளியான மெகா அறிவிப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சமூக உதவித் திட்டங்கள்ல பல முக்கியமான மாற்றங்கள் மற்றும் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பா, முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன்தரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் தொடர்பான விதிகளில் மத்திய அரசு பெரிய அளவில் மாற்றம் செய்துள்ளது. அது என்னென்ன மாற்றங்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம் வாங்க.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய சமூக உதவித் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு (2026-27 முதல் 2030-31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 53,428 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் பெயர் ‘பிரதான் மந்திரி சமாஜிக் சஹாயதா யோஜனா’ என மாற்றப்பட்டுள்ளது. அதோடு, இதிலுள்ள 4 துணைத் திட்டங்களுக்கும் புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன:

முதியோர் ஓய்வூதியத் திட்டம்: பிரதான் மந்திரி வீராயத் பென்ஷன் யோஜனா

விதவைகளுக்கான ஓய்வூதியம்: பிரதான் மந்திரி விதவா பென்ஷன் யோஜனா

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம்: பிரதான் மந்திரி திவ்யங்குலா பென்ஷன் யோஜனா

குடும்பத் தலைவர் இறப்பு உதவித் திட்டம்: பிரதான் மந்திரி பரிவார் லாப் யோஜனா

மாற்றுத் திறனாளி ஓய்வூதியத்தில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்

இதுவரை மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறுவதில் சில கடுமையான விதிமுறைகள் இருந்தன. ஆனால், இப்போது மத்திய அரசு அதில் பெரிய தளர்வுகளை அளித்துள்ளது:

முன்பு 80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைத்து வந்தது. ஆனால் இப்போது, 40 சதவீத மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.

முன்பு ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 18 வயது ஆகியிருக்க வேண்டும். இப்போது அந்த வயது வரம்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. இதன் மூலம், பிறப்பிலிருந்தே தகுதியுள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெற முடியும்.

உதவித்தொகை உயர்வு:

79 வயது வரையிலான பயனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ. 300-லிருந்து ரூ. 375 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 500-லிருந்து ரூ. 625 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களால், நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 8.33 லட்சத்திலிருந்து 27.48 லட்சமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மற்ற திட்டங்கள் எப்படிச் செயல்படும்?

முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் மற்றும் குடும்ப நிதி உதவித் திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை; முன்போலவே வழக்கமான முறையில் தொடரும்.

இந்தத் திட்டங்களின் பலன்களைப் பெற குடும்பம் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்க வேண்டும்.

மத்திய அரசு வழங்கும் தொகையுடன் மாநில அரசுகளும் தங்களின் பங்களிப்பைச் சேர்த்து வழங்குகின்றன. மாநிலங்களின் பங்களிப்புடன் சேர்த்து பெரும்பாலான பயனாளிகளுக்கு மாதத்திற்கு சராசரியாக ரூ. 1,100 வரை ஓய்வூதியம் கிடைக்கிறது.

வழக்கம்போல மாநில நலத்துறை மூலமாகவும், கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் மூலமாகவும் தகுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டு, நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்படும்.

புதிய வழிகாட்டுதல்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மக்கள் நேரடியாகப் பயனடைய உள்ளனர்.

Source link