பிற மதத்தினர் கோயிலுக்குள் நுழைவதை தடுக்க வழக்கு

மதுரை: பிற மதத்தினர் கோயில்களுக்குள் நுழைவதை தடுக்க தாக்கலான வழக்கில், விதிமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்படுகிறது. அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என அரசு தரப்பு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.

மதுரை தங்கம் வெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: பிற மதத்தினர் தங்களின் மத அடையாளங்களுடன் அரசியல் நோக்கத்திற்காக கோயிலுக்கு வழிபட வருகின்றனர். அங்குள்ள கடவுள் மீது நம்பிக்கை இருப்பதாக பெயரளவில் கூறிவிட்டு கையெழுத்திட்டு செல்கின்றனர். கோயில்களில் நுழைவதற்கான அங்கீகார சட்டம் மற்றும் விதிகளை மீறியவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்.

விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும். பிற மத அடையாளங்களை தாங்கியவர்கள், சம்பந்தப்பட்ட மதங்களை பின்பற்றாதவர்களை கோயிலுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கிஷோர் ஆஜரானார்.

நீதிபதிகள்: திருவண்ணாமலை கோயிலில் குல்லா அணிந்த ஒருவர் மத அடையாளத்துடன் சென்றார். இது ஏற்புடையதல்ல. முதல்வர் விஜய், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முறைப்படி சென்று கையெழுத்திட்டார். குங்குமம் அணிந்திருந்தார். இது ஏற்புடையது என்றனர்.

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்: இவ்விவகாரத்தில் விதிமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்படுகிறது. அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Source link