பீஹாரில் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; சாலையில் சிதறிய சடலங்கள், பலர் பலி என அச்சம்

பாட்னா: பீஹாரில் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியது. இதில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சிவான் மாவடடத்தில் அல்மாபூர் என்ற கிராமத்தில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை உள்ளூர்வாசியான முகமது அமிருதீன் மியான் என்பவருக்கு சொந்தமானது. ஆலையில் ஏராளமான பட்டாசுகளை இருப்பு வைத்திருந்ததாக தெரிகிறது.

எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்துச் சிதறின. அப்போது ஆலையில் பலர் இருந்துள்ளனர். கட்டடத்தின் முன்பக்கம் இடிந்து சாலையில் பட்டாசுகள் சிதறின. தொடர்ச்சியாகவும் இடைவெளிவிட்டும் பல மணிநேரம் சாலையில் கொட்டிய பட்டாசுகள் வெடித்தன.

பட்டாசுகள் வெடித்ததில் ஆலையின் அருகில் இருந்த கட்டடம் முற்றிலும் தரைமட்டமானது. பலியானவர்களின் உடல்பாகங்கள், சாலையிலும், இடிபாடுகளிலும் சிதிறி கிடந்தன. வெடி வெடிக்கும் சத்தம் முழுமையாக அடங்கிய பின்னர் ஊர் மக்கள் உள்ளே சென்று பார்த்தனர். இடிபாடுகளில் சிதறிக் கிடந்த உடல்களை கண்டு அதிர்ந்து போயினர்.

மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு கருதி அந்த பகுதியை போலீசார் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.

Source link