புதுச்சேரியில் இன்று (25.10.2026) காலை பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. அதிலும் குறிப்பாக, ஒரு மணி நேரத்தில் சுமார் 10 சென்டிமீட்டர் மழை பதிவானதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதாவது இந்திரா காந்தி சதுக்கம், ராஜீவ் காந்தி சதுக்கம், சிவாஜி சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கியது. இதனால், பொதுமக்கள் சாலைகளைக் கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். பல இடங்களில் இன்னும் மழைநீர் வடியாத நிலையில், தேங்கியுள்ள நீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. மேலும், சில பள்ளிகளிலும் மழைநீர் புகுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்றொருபுறம் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (26.10.2026- திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பைக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
