புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்!- மு.க.ஸ்டாலின்

சென்னை:

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வணக்கம்!

மகிழ்ச்சியுடன், ஒரு புதிய எனர்ஜியுடன் உங்கள் முன்னால் நிற்கிறேன். ‘Delimitation’ எனும் கருப்புச் சட்டத்திற்கு எதிரான நம்முடைய போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஆபத்தை ஒரு வருடத்திற்கு முன்பே அறிந்து, இந்த வெற்றியைப் பெறுவதற்கான அனைத்துப் பணிகளையும் அப்போதே நாம் தொடங்கினோம்.

மாநில முதல்வர்கள் – எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் தொடங்கி, நேற்று முன்தினம் கருப்புக் கொடி ஏற்றி, கருப்புச் சட்ட நகலைக் கொளுத்தினேன்! அதேபோல், நேற்று திண்டுக்கல்லில் வெற்றிக்கான வெடியைக் கொளுத்தினேன்! தீ பரவட்டும் என்று சொன்னேன். அது பார்லிமெண்ட் வரை பற்றிக் கொண்டது.

50, 60-களில் பார்த்த பழைய தி.மு.க.வைப் பார்க்க வேண்டி வரும் என்று எச்சரித்தேன். “அப்படி என்றால் என்ன?” என்று கேட்ட சில அரைவேக்காடுகளுக்கு, “இதுதான்டா தி.மு.க. பாருங்கள்” என்று நேற்று ஸ்ட்ராங்காகக் காட்டியிருக்கிறோம்.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில், முழுக்க முழுக்க பா.ஜ.க.வுக்குச் சாதகமாகக் கொண்டு வரப்பட்ட கருப்புச் சட்டத்தை, நாடாளுமன்றத்தில் தோற்கடித்த அனைவருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சராக என்னுடைய நன்றி! நன்றி! நன்றி!

முக்கியமாக, இதில் முழுக்க முழுக்க என்னுடன் நின்ற தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்ல வேண்டும்!

பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற மாறுவேடத்தில் இந்தச் சட்டத்தைப் பா.ஜ.க. கொண்டு வரப் பார்த்தார்கள். ஆனால், இந்த ஏமாற்றுத் திட்டத்தை முன்னின்று தோற்கடித்ததே பெண்கள்தான்! அவர்களுக்கு என்னுடைய சல்யூட்!

இந்தியா கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களும் ஒன்றாகச் சேர்ந்து நின்ற காரணத்தினால், இது சாத்தியமாகியிருக்கிறது. வடக்கு – தெற்கு என நமக்குள்ளே பிளவை ஏற்படுத்தி, சண்டை போட்டுக் கொள்ள வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்குச் சரியான சம்மட்டியடி கிடைத்திருக்கிறது. 12 ஆண்டுகளில் முதல் முறையாகப் பிரதமர் மோடி அரசு கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வியடைந்திருக்கிறது!

இது தொடக்கம்தான்! பா.ஜ.க. இனி நாடு முழுக்கப் பெறப் போகும் தோல்விகளுக்கான தொடக்கம் இது! எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான தொடக்கம் இது! நாம் ஒன்றுபட்டால் வெற்றி உறுதி என நான் தொடர்ந்து சொல்லி வந்தேன். அது உண்மை எனக் காட்டியிருக்கும் தொடக்கம் இது!

இந்த நேரத்தில், நேற்று நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் “பெண்கள் இடஒதுக்கீட்டிற்கும் இந்த மசோதாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது ஒரு தேச விரோதச் சட்டம். இதை அனுமதிக்க மாட்டோம். இதை அனைவரும் சேர்ந்து தோற்கடிப்போம்” எனத் தெளிவான உணர்வுகளை வெளிப்படுத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கும், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் அம்மையார் சோனியா காந்தி அவர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் மட்டுமல்ல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் அருமைச் சகோதரி மமதா பானர்ஜி, உத்தரப் பிரதேசத்தின் ஒளிவிளக்குச் சகோதரர் அகிலேஷ், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தள செயல் தலைவர் தேஜஸ்வி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சகோதரர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கே. சந்திரசேகர ராவ், சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகிய தேசியத் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்!

அதுவும், தொடக்கத்திலிருந்தே இந்த முயற்சியில் என்னுடைய கரங்களை வலுப்படுத்திய நம் திராவிட உடன்பிறப்புகளான தோழர் பினராயி விஜயன், சகோதரர் ரேவந்த் ரெட்டி, மரியாதைக்குரிய சித்தராமையா, நண்பர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கும், தமிழ்நாட்டில் இருக்கிற நம்முடைய கொள்கைத் தோழமைகளான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்!

இப்போது நாம் பெற்றிருப்பது பாதி வெற்றிதான்! 2001-ஆம் ஆண்டில் செய்தது போன்றே, இப்போதும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2051 வரை, தொகுதி எண்ணிக்கையை மறுவரையறை செய்வதைத் தள்ளி வைக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்!

அதுமட்டுமல்ல, பெண்களின் இடஒதுக்கீட்டிற்காக 2023-ஆம் ஆண்டே நாம் ஆதரித்து நிறைவேற்றிய சட்டத்தை எந்த நிபந்தனைகளும் இல்லாமல், பா.ஜ.க. அரசு உடனடியாக இப்போது இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கே அமல்படுத்த வேண்டும். அதுதான் முழு வெற்றியாக அமையும்! அதற்காகப் போராடுவோம்!

மகிழ்ச்சியான இந்த நேரத்தில், இந்தத் தொகுதி மறுவரையறைச் சட்டம், யாரெல்லாம் நம் நண்பர்கள் என மட்டும் அடையாளம் காட்டவில்லை; தமிழ்நாட்டின் துரோகிகள் யார் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்திருக்கிறது. அப்படித் துரோகம் செய்த பழனிசாமியின் அடிமைக் கும்பலுக்குத் தேர்தலுக்கு முன்பே படுதோல்வி கிடைத்திருக்கிறது. பழனிசாமி டெல்லியின் ஏஜெண்ட் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது!

நம்முடைய திராவிட இயக்க வரலாறு என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தத்திற்குப் போராடி, இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது தி.மு.க.! எப்போதெல்லாம் இந்தித் திணிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் உறுதியாகப் போராடி வென்றது தி.மு.க.!

அதே போன்றுதான், நேற்று தமிழ்நாட்டின் உரிமைகளை, பிரதிநிதித்துவத்தைத் தடுக்க நினைத்ததைப் போராடி வென்றிருக்கிறது தி.மு.க.! இந்தியாவே இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி உயர்வாகப் பேசுகிறது!

நம் வெற்றிகள் தொடரட்டும், தொடரும்! தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பா.ஜ.க.வுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அ.தி.மு.க.வுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மறக்கவே முடியாத மாபெரும் தோல்வியைக் கொடுப்போம்!

வெல்வோம் ஒன்றாக! என்று கூறியுள்ளார்.

Source link