புரட்டி எடுக்கும் கனமழை; சென்னைக்கு விரையும் தேசிய பேரிடர் மீட்பு படை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் நீடித்து சென்னையைப் புரட்டி போட்டது. வட சென்னையில் மட்டும் 5 இடங்களில் 21 செ.மீ. மேல் மழைப் பதிவாகியது. அதிகபட்சமாகப் பாரி முனையில் 35 செ.மீ. பதிவாகியது. இதனால் சாலையில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல், மழை நீருடன் கழிவுநீர் கலப்பு என ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகியது.

இதனால் மழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வரவழைத்தனர். பின்பு பாதிப்பு குறித்து புகார் அளிக்க  மண்டல வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், இன்று (18-10-26) சென்னையில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் சென்னை மக்களுக்கு ஒலியுடன் கூடிய எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். இன்று மழையின் தாக்கம் சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் 3 குழுக்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மீட்புக் குழுவிலும் தலா 30 வீரர்கள் என மொத்தம் 90 வீரர்கள் சென்னைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.