புற்றுநோய் மருந்துகளின் விலை கணிசமாகக் குறைகிறது: லாப வரம்பை 30 சதவீதமாகக் குறைத்தது மத்திய அரசு

Anonna Dutt

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் ‘பெம்ப்ரோலிஸுமாப்’ (pembrolizumab), ‘ரிபோசைக்ளிப்’ (ribociclib) மற்றும் ‘அபெமாசைக்ளிப்’ (abemaciclib) போன்ற காப்புரிமை (patent) பெற்ற முக்கியமான மருந்துகள் உட்பட 137 புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பிற்கு மத்திய அரசு 30% உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.

மொத்த வியாபாரிகள் அல்லது மருத்துவமனைகளுக்கு உற்பத்தியாளர்கள் விற்கும் விலையில் இருந்து இந்த 30% வரம்பு கணக்கிடப்படும். இந்த புதிய விலை மாற்றங்களின் பட்டியலை அடுத்த 7 நாட்களுக்குள் தேசிய மருந்து விலை நிர்ணய அதிகார அமைப்பிடம் (NPPA) உற்பத்தியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் வாசிக்க

இது தொடர்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பில், “இந்த மாற்றியமைக்கப்பட்ட விலைகள் 2026 நவம்பர் 09 (09.11.2026) முதல் அமலுக்கு வரும். மறுஉத்தரவு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் ஜெனரல் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில், புற்றுநோயாளிகளுக்கு மிக அத்தியாவசியமான மருந்துகளை மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்காக இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தேசிய மருந்து விலை நிர்ணய அதிகார அமைப்பின் கூட்டத்தில் சந்தை தரவுகளை ஆய்வு செய்த நிபுணர்கள், விலை கட்டுப்பாட்டில் இல்லாத புற்றுநோய் மருந்துகளுக்கு சராசரியாக 170% வரையிலும், சில மருந்துகளுக்கு 700% வரையிலும் அதிகப்படியான லாபம் வைத்து விற்கப்படுவதைக் கண்டறிந்தனர்.

தற்போது இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் ஆண்டு விற்பனை சுமார் ரூ.12,500 கோடியாக உள்ளது. இதில் ஏற்கனவே விலை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மருந்துகளின் பங்கு வெறும் ரூ.2,250 கோடி மட்டுமே.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த லாப வரம்பு கட்டுப்பாட்டின் மூலம், மருந்துகளின் சில்லறை விற்பனை விலை (MRP) 20% முதல் 70% வரை குறையும் என்றும், இதன் மூலம் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,500 கோடி வரை பணம் மிச்சமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விலை கணக்கீட்டு முறை:

2019-ஆம் ஆண்டு 42 புற்றுநோய் மருந்துகளின் விலையைக் குறைக்கப் பயன்படுத்தப்பட்ட அதே சூத்திரமே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

எம்.ஆர்.பி கணக்கீடு: விநியோகஸ்தர் விலை x {1 + (லாப வரம்பு / (100 − லாப வரம்பு))} + ஜி.எஸ்.டி.

அதாவது, ஒரு மருந்து விநியோகஸ்தருக்கு ரூ.70-க்கு விற்கப்பட்டால், ஜி.எஸ்.டி தவிர்த்து அதன் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ரூ.100 ஆக இருக்கும்.

தற்போதுள்ள எம்.ஆர்.பி விலை, இந்த புதிய கணக்கீட்டை விட குறைவாக இருந்தால், அந்த குறைந்த விலையையே நிறுவனங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள், கூடுதல் தொகையை வட்டியுடன் திரும்பச் செலுத்த நேரிடும்.

விலை குறைப்பினால் சந்தையில் மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய உற்பத்தி அளவை நிறுவனங்கள் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். உற்பத்தியைக் குறைக்கவோ அல்லது நிறுத்திவைக்கவோ விரும்பும் நிறுவனங்கள் தேசிய மருந்து விலை நிர்ணய அதிகார அமைப்பிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

டாடா மெமோரியல் மருத்துவமனை நடத்திய ஆய்வில், காப்புரிமை பெற்ற நவீன புற்றுநோய் சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளில் வெறும் 1.6% பேர் மட்டுமே அதிக விலை காரணமாக அதைப்பெற முடிகிறது எனத் தெரியவந்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை, புற்றுநோய் சிகிச்சையை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மேலும் எட்டக்கூடியதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link