புழல் சிறையில் அடுத்தடுத்து தப்பிய கைதிகள்: உதவி ஜெயிலர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்

சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில், பணிப் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாக ஒரு உதவி ஜெயிலர் மற்றும் 6 சிறைக் காவலர்கள் என மொத்தம் 7 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை புழல் மத்திய சிறையில் 3,300-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும், ஆயிரக்கணக்கான தண்டனைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை விதிகளின்படி, தினமும் காலையில் கைதிகள் தங்களது அறைகளில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவது வழக்கம். தொடர்ந்து, மாலை 6 மணியளவில் அனைவரும் மீண்டும் அவரவர் அறைகளில் அடைக்கப்பட்டு, சிறை ஊழியர்களால் கைதிகளின் எண்ணிக்கை சரிபார்க்கப்படும்.

இந்நிலையில், செவ்வாய்க் கிழமை (அக். 20) மாலை வழக்கமான உணவு நேரத்தின்போது கைதி சுதீப் அறையில் இல்லாதது தெரியவந்தது. 

நேபாள நாட்டைச் சேர்ந்த இவர், சென்னை பாடி கலைவாணி நகரில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் திருட்டு வழக்கு தொடர்பாக ஜெ.ஜெ. நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். 

சிறை முழுவதும் தேடியும் சுதீப் கிடைக்காததால், புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் புதன்கிழமை (அக். 21) மதியம் உணவு இடைவேளையின்போது மற்றொரு கைதியான சுரேஷ் காணாமல் போயிருப்பது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த  சுரேஷ் , கடந்த 2021-ஆம் ஆண்டு போக்சோ  வழக்கில் திருமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றம் அவருக்குத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, புழல் மத்திய சிறை-1-ல் அடைக்கப்பட்டார். சுமார் 5 ஆண்டுகளாகச் சிறையில் நன்னடதையுடன் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், சிறை நிர்வாகம் அவருக்கு நன்னடத்தை அடிப்படையில் சிறை அங்காடியில் பணிபுரிய அனுமதி அளித்திருந்தது.

இதன்படி, தினமும் காலையில் சிறைக்கு வெளியே உள்ள அங்காடிக்குச் சென்று சிறை ஊழியர்களுக்கு உதவியாக வேலை பார்த்துவிட்டு, மீண்டும் சிறைக்குத் திரும்புவது வழக்கம்.

அதன்படி புதன்கிழமை காலை 7 மணியளவில் அங்காடிக்கு வேலைக்குச் சென்ற சுரேஷ், காலை 10 மணி அளவில் சிறைக் காவலர்கள் கவனக்குறைவாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சிறை முழுவதும் தேடியும் அவர் கிடைக்காதது குறித்து புழல் போலீசில் புகாரளிக்கப்பட்டது.   

புழல் சிறையில் அடுத்தடுத்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தப்பியோடிய 2 கைதிகளையும் பிடிக்க காவல் துறை சார்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சென்னை திருமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த நேபாள கைதி சுதீப்பை போலீசார் இன்று மடக்கிப் பிடித்து மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு கைதியான சுரேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக் கோபுரங்கள் நிறைந்த புழல் மத்திய சிறையில் இருந்து கைதிகள் தப்பிச் சென்ற விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சிறைக் காவலர்களின் கடுமையான கவனக்குறைவு மற்றும் அலட்சியமே கைதிகள் தப்புவதற்கு முக்கியக் காரணம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 6 சிறைக் காவலர்கள் மற்றும் 1 உதவி ஜெயிலர் என மொத்தம் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.   

Source link