சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷே, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, நேற்று சந்தித்து பேசினார். சிறையில் இருந்து வெளியே வந்த உதயநிதி கோபமாக கட்சி நிர்வாகிகளிடம் பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார முறைகேடு வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷ், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஓரிரு நாட்களில் அன்பில் மகேஷே, காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் 12:30 மணிக்கு, புழல் சிறையில் உள்ள மகேஷே, தி.மு.க.,வின் இளைஞர் அணி செயலர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் பேசினர்.
அரை மணி நேரத்திற்கு மேல், மகேஷுடன் பேசிய உதயநிதி, சிறையில் இருந்து வெளியே கோபமாக வந்தார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம், கோபமாக பேசிவிட்டு காரில் புறப்பட்டார். அதன்பின் சேகர்பாபு அளித்த பேட்டி:
காவல்துறை எப்போது அழைத்தாலும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்தவர் மகேஷ். அடிப்படை முகாந்திரம் இல்லாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த அரசு எங்களை மிரட்ட பார்க்கிறது. அதற்கு நாங்கள் அஞ்சமாட்டோம். சொந்த குடும்பத்தையே தாக்கும் இயக்கம், தி.மு.க., இல்லை. குடும்ப பாசத்தோடு உள்ள இயக்கம். இதை நிதி அமைச்சருக்கு தெரிவியுங்கள்.
அன்பில் மகேஷே பொறுத்தவரை எந்த கூடுதலான வசதியையும், அவர் புழல் சிறையில் கேட்கவில்லை. அவரை பொறுத்தவரை உறுதியாக இருக்கிறார். இந்த கைது நடவடிக்கை, மேலும் அவரை உறுதியாக்கி உள்ளது. ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோர் உறுதியோடு களத்தில் இருக்கும் வரை, எங்களை போன்றோருக்கு, எந்த அச்சமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
