புழல் சிறைவாசலில் தவெகவை மிரட்டும் வகையில் பேசிய திமுக கவுன்சிலர் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை காவல்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.100 கோடி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புழல் சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறை வாசலில் ஆவேசமாக நின்று பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணன் மீது புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
புழல் சிறைவாசலில் தவெகவை மிரட்டும் வகையில் பேசிய திமுக கவுன்சிலர்
கடந்த திமுக ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நீண்ட விசாரணை மற்றும் சோதனை நடத்தினர். அதன் பிறகு திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது சிறை வளாகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டு கோஷங்களை எழுப்பினர். அந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகி ஒருவர்கரூரிலேயே அவனைப் போட்டிருந்தால் சரியா இருந்திருக்கும் தலைவரே! என்று ஆவேசமாகக் கத்தி, பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், திமுகவை சேர்ந்த ஒருவர் இப்படி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
விசாரணையில் அம்பலமான அடையாளம்
சமூக வலைதளங்களில் வைரலான அந்தக் சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, சென்னை உளவுத்துறை மற்றும் புழல் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையின் முடிவில், சர்ச்சைக்குரிய வகையில் மிரட்டல் விடுத்த நபர் வேலூரைச் சேர்ந்த சரவணன் என்பது உறுதியானது. இவர் வேலூர் மாநகராட்சி கவுன்சிலராகப் பதவி வகித்து வருவதுடன், வேலூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராகவும், வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருந்து வருவது தெரியவந்தது.
வழக்குப் பதிவு மற்றும் தனிப்படை அதிரடி
இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களுக்கு மிரட்டல் விடுத்தது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறான கருத்துகளைப் பேசியது மற்றும் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் புழல் காவல் நிலைய போலீசார் சரவணன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள கவுன்சிலர் சரவணனை உடனடியாகக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தனிப்படை போலீசார் தற்போது வேலூருக்கு விரைந்துள்ளனர். வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகாமிட்டுள்ள தனிப்படையினர், சரவணனைப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புழல் சிறை வாசலில் திமுக கவுன்சிலர் ஒருவர் மிரட்டல் விடுத்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source link
