கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்திற்கு மனித தவறே காரணம்; 9 சிறைக் காவலர்களை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி சந்தீப் ராய் உத்தரவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில், சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தில், சிறைக் காவலர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். 

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் ஒரே அறையில் விழுப்புரத்தைச் சேர்ந்த லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், சபரி உள்ளிட்ட 17 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். திங்கள் கிழமை (அக்டோபர் 26) இரவு 10.30 மணியளவில், கைதி ஒருவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி சத்தமிட்டுள்ளனர். இதைக் கேட்டு சிறைக் காவலர் தங்கப்பாண்டி உட்பட மூன்று காவலர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, அங்கு மறைந்திருந்த கைதிகள் அனைவரும் சேர்ந்து காவலர்களைத் திடீரெனக் கடுமையாகத் தாக்கிவிட்டு சிறை வளாகத்தை விட்டுத் தப்பியோடினர்

தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் மற்றும் தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிடாரி ஆகியோர் தேனி சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். சிறையைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீஸார் உடனடிப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க ஐ.ஜி விஜயேந்திர பிடாரி உத்தரவின் பேரில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு முதல் நடைபெற்ற தீவிர தேடுதலில், சிறை அருகே உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த பிரவீன், மற்றும் சிலம்பரசன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய 4 கைதிகளைப் போலீஸார் மீண்டும் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கைதிகள் தப்பியது குறித்து விசாரணை நடத்துவதற்காகவும் சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து, அங்கிருந்து கார் மூலம் தேனி சிறைச்சாலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, சிறையிலிருந்து கைதிகள் தப்பிச் சென்றதற்கு ‘மனிதத் தவறே’ காரணம் என்று சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தில், பணியில் இருந்த சிறைத்துறை காவலர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், இந்தத் தவறு மற்றும் கைதிகள் தப்பிச் செல்ல வழிவகுத்த சூழல்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிப்பதற்காக, தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலங்களின் வனப்பகுதிகள் மற்றும் மாநில எல்லைகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Source link