பூவே உனக்காக பட முதல் ஹீரோ விஜய் அல்ல, இந்த நடிகர் தான்; கடைசி நேரத்தில் நாயகன் மாறியது ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாக்ஸ்ஆபீஸ் கிங்காக இருந்த விஜய், தற்போது தனது சினிமா வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அரசியலுக்கு சென்றுவிட்டாலும், சினிமாவில் இருந்தபோது அவரது படங்கள் உருவானது குறித்து பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில், விஜய் முன்னணி நடிகராக உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த படம் பூவே உனக்காக படத்தில் அவரை ஹீரோவாக வைத்து இயக்க காரணம் என்ன என்பது குறித்து விக்ரமன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய், 1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில், பூவே உனக்காக என்ற படத்தில் நடித்திருந்தார். சங்கீதா நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் அஞ்சு அரவிந்த், நம்பியார். நாகேஷ், ஜெய் கணேஷ், மலேசியா வாசுதேவன், சார்லி, விஜயகுமாரி, சுகுமாரி, உள்ளிட்ட பல நசட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.  எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

தான் காதலித்த பெண் வோறொருவரை காதலிக்கிறார் என்று தெரிந்துகொண்ட ஹீரோ அவர்கள் காதலை சேர்த்து வைக்க, செய்யும் செயல்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜயின் சிறப்பான படங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக பூவே உனக்காக இருக்கும்.  அதேபோல், விக்ரமன் இயக்கிய படங்களில் பூவே உனக்காக அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த படமாக இன்றுவரை நிலைத்திருக்கிறது.

இந்த படம் குறித்து பேசிய விக்ரமன், விஜய் ஒரு பெரிய உச்ச நடிகராக வருவார் என்பது முதல்நாள் ஷூட்டிங்கிலேயே எனக்கு தெரியும். அவரிடம் எல்லா திறமைகளும் இருக்கிறது, அவரின் நினைவாற்றல் போல் யாரிடமும் நான் பார்த்ததே இல்லை. டைலாக் பேப்பர் கொடுத்தால் ஒருமுறை படிக்க சொல்லி கேட்பார். அடுத்து டேக் போலாம் சார் என்று மெதுவாக கேட்பார். டேக் எடுத்தால் அதை அப்படியே பேசி முடிப்பார். 3-4 வகைகளில் வித்தியாசமாகவும் பேசி காட்டுவார். இந்த படத்திற்கு டப்பிங் பேசும்போதும் 3 நாட்களில் காலை 7-9 மணி வரை 2 மணி நேரம் தான் டப்பிங் பேசினார். 

சாதாரணமாக முதல் பாதி 4 நாட்கள் 2ம் பாதி 4 நாட்கள் என ஒரு படத்திற்கு டப்பிங் பேச 8 நாட்கள் ஆகும் ஆனால் விஜய் அப்படி இல்ல, அப்போது அவர் எஸ்.ஏ.சி இயக்கத்தில் மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்து வந்ததால், பூவே உனக்காக டப்பிங்கை காலை 2 மணி நேரம் என 3 நாட்களில் மொத்தமாக 6-7 மணிநேரத்தில் முழு படத்திற்கும் டப்பிங் பேசி முடித்துவிட்டார். இந்த படத்தை முதலில் தொடங்கும்போது கார்த்திக்கை தான் ஹீரோவாக போட சொன்னார்கள். விநியோகஸ்தர்களும் அப்படியே சொன்னார்கள். 

கார்த்திக் – விக்ரமன் காமினேஷன் சூப்பராக இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் விஜய் தான் என்னோட சாய்ஸாக இருந்தார். அதற்கு முன்பு நான் அவர் நடித்த படத்தை பார்த்தது இல்லை. டிவியில் ரசிகன், மற்றும் தேவா பட பாடல்களை போடும்போது பார்த்து தான் அவரை பிடித்து போய் இந்த படத்தில் நடிக்க வைத்தேன் என்று விக்ரமன் கூறியுள்ளார்.

Source link