பெங்களூர்: கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையின்போது, பெங்களூரில் கிட்டத்தட்ட 50% வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
SIR நடவடிக்கைக்கு முன்பு, பெங்களூரில் மொத்தம் 1.03 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் 59.08 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதாவது ஒட்டுமொத்த வாக்காளர்களில் சுமார் 45.5% பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
எண்ணிக்கையின் அடிப்படையில் என்று பார்த்தால், மொத்தமாக 46.88 லட்சம் பெயர்கள் ‘ASDDO’ அடிப்படையில் நீக்கப்பட்டிருக்கிறது. Absent, Shift, Death, Duplicate, Others என்பதைதான் ASDDO என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. இதில் கவனிக்க வேண்டிய 2 விஷயங்கள் இருக்கின்றன. முதல் விஷயம் வாக்காளர்கள் அதிகம் நீக்கப்பட்ட தொகுதிகள், பாஜகவின் கோட்டைகளாகும். 2வது கவனிக்க வேண்டிய விஷயம், நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருக்கிறது என்பதுதான்.
முதல் விஷயத்தை பொறுத்தவரை, தொகுதிகள் வாரியான தரவுகளின்படி.. பெங்களூரில் அதிகப்படியான வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளாக பெங்களூர் தெற்கு, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, கே.ஆர்.புரம் இருக்கிறது. இதெல்லாம் பாஜகவின் கோட்டையாகும்.
பெங்களூர் தெற்கு தொகுதியை பொறுத்தவரை, மொத்தம் 3.63 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. மகாதேவபுராவில் 2.96 லட்சம், பொம்மனஹள்ளியில் 2.65 லட்சம், கே.ஆர்.புரம் தொகுதியில் 2.58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த 4 தொகுதிகளிலும் பாஜகவை சேர்ந்தவர்கள்தான் எம்எல்ஏக்களாக இருக்கின்றனர்.
2வது விஷயத்தை பொறுத்தவரை, இந்த வாக்காளர்கள் நீக்கம் வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பெருமளவில் பாதிக்கலாம். கடந்த 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் ஜெயித்திருந்தது. இதில் 70 தொகுதிகளில் அதாவது சுமார் 51% இடங்களில் நீக்கப்பட்ட வாக்களார்களின் எண்ணிக்கை.. காங்கிரஸின் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது.
அதேபோல பாஜக வென்ற 66 தொகுதிகளில் 50 தொகுதிகளில், அதாவது 75% இடங்களில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அவர்களின் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் சதவீத அடிப்படையில் பாஜகவுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மறுபுறம் இந்த SIR நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் மொத்தம் 771 வெளிநாட்டு குடிமக்கள், வாக்காளர் பட்டியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 688 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள். ஒரே ஒருவர் மட்டும் வங்கதேசத்தை சேர்ந்தவர். பெங்களூர் வடக்கு தேர்தல் மாவட்டத்தில் மட்டும் 580 வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டிருக்கின்றனர். இதில் 542 பேர் நேபாளிகள் ஆவர்.
பல்க்காக இவ்வளவு பேர் நீக்கப்பட்டிருப்பது குறித்தும், தொகுதிகளில் வாக்காளர் பெயர்களை நீக்குவதற்காக மொத்தமாக படிவம் 7 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டது குறித்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி அன்பு குமார், “மொத்தமாக வந்த விண்ணப்பங்களை மட்டும் அடிப்படையாக கொண்டு ஒரு வாக்காளரின் பெயர் கூட நீக்கப்படவில்லை. இந்த நடைமுறை முற்றிலும் வெளிப்படையானது. பெயர் விடுபட்ட தகுதியான வாக்காளர்கள் படிவம் 6 மூலம் விண்ணப்பித்தால் உரிய சரிபார்ப்புக்கு பின் பெயர் கண்டிப்பாக சேர்க்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.
மொத்தத்தில் SIR நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் பல மாநிலங்களில் வாக்களார்கள் நீக்கப்பட்டிருந்தாலும், அதிக சதவிகித வாக்காளர்கள் நீக்கப்பட்டது கர்நாடகாவில்தான். தமிழ்நாட்டில் 8.43% வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். கர்நாடகாவில் 17.91% வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
