பெங்களூருக்கு மட்டுமே குடிநீர் கையிருப்பு காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு

சென்னை: ‘பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு மட்டுமே, அணைகளில் நீர் இருப்பு உள்ளதால், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க இயலாது’ என, கர்நாடக மாநில அரசு கைவிரித்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று டில்லியில் நடந்தது.

இதில், தமிழக நீர்வளத்துறை செயலர் சத்யபிரதா சாஹு, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பற்றாக்குறை அப்போது, நீர்வளத்துறை செயலர் சத்யபிரதா சாஹு பேசியதாவது:

ஜூன் 1 முதல் ஜூலை 19ம் தேதி வரை, பிலிகுண்டுலு நீரளவை தளத்தைக் கடந்து, தமிழகத்திற்கு 3.44 டி.எம்.சி., மட்டுமே நீர் கிடைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய 28.3 டி.எம்.சி., நீருடன் ஒப்பிடுகையில், இது 12.15 சதவீதம் மட்டுமே. இதனால், 24.8 டி.எம்.சி., நீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

கடந்த 20ம் தேதி நிலவரப்படி, கர்நாடகாவின் நான்கு அணைகளில், 48.9 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 36.9 டி.எம்.சி.,யாக உள்ளது. மேட்டூர் அணைக்கு கிடைக்கும் நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது.

இதனால், அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கு மட்டும் 1,003 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பாசனத்திற்கு நீர் திறக்க முடியவில்லை.

எனவே, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடு செய்ய, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீர் திறக்க, கர்நாடக அரசிற்கு, காவிரி ஆணையம் உத்தரவிட வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

நீண்ட நேர விவாதம் ‘கர்நாடகாவில் மழைப்பொழிவு மற்றும் வறட்சி காரணமாக, பெங்களூரு நகருக்கு குடிநீர் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்திற்கு தற்போது நீர் திறக்க இயலாது’ என, கர்நாடக அரசின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நீண்ட நேர விவாதம் நடந்தது.

இறுதியாக, காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பேசியதாவது:

மழைப்பொழிவு மற்றும் நீர் வரத்தை, மேலும் ஒரு வாரம் கண்காணிக்கலாம்; அதன் பின், மாநிலங்கள் முன்வைக்கும் கருத்துகள், நீரியல், வானிலை, சார்ந்த சூழ்நிலைகளை கருத்தில் வைத்து முடிவெடுக்கலாம்.

இதற்காக, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தை, வரும் 28ம் தேதி கூட்டி, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை தீர்மானிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு காவிரி ஆணைய கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து, நீர்வளத்துறை வாயிலாக, தமிழக தலைமை செயலர் சாய்குமார் மற்றும் முதல்வர் விஜய் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து, இப்பிரச்னை குறித்து, உச்சநீதிமன்றத்தில் முறையிட, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக, மூத்த சட்ட வல்லுனர்கள் ஆலோசனையை பெற, தமிழக அரசு வழக்கறிஞர்கள் குழுவினர் இன்று டில்லி செல்ல உள்ளனர்.

Source link