பெங்களூரு நகரின் இரண்டாவது விமான நிலையம் தெற்கு பகுதியில் வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் ஓசூர் பகுதி மக்கள் எவ்வாறு பயனடைவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஓசூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு பல சிக்கல்களை எதிர்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.
ஓசூர் சர்வதேச விமான நிலையத்திற்கு மத்திய அரசு அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்தில் (BIAL) இருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவில் புதிய விமான நிலையங்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி மத்திய பாதுகாப்பு துறை சார்ந்த வான்வெளி கட்டுப்பாடுகளும் சிக்கலாக முன்வந்து நிற்கின்றன. எனவே ஓசூர் விமான நிலையத் திட்டம் தற்போதைக்கு எட்டாக் கனியாகும் போலத் தெரிகிறது.
தெற்கு பெங்களூருவில் அமையும் 2வது ஏர்போர்ட்
பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையத்தை கொண்டு வருவதற்கான வேலைகளில் கர்நாடகா அரசு மும்முரம் காட்டி கொண்டிருக்கிறது. பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில் தெற்கு பெங்களூருவில் சாதகமான அம்சங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக சோமனஹள்ளி, ஹரோஹள்ளி, சிக்கசோலூர் ஆகிய பகுதிகளில் ஒன்றை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
ஓசூருக்கு பிரத்யேக விமான நிலையம் வரவில்லை என்றாலும், தெற்கு பெங்களூருவில் அமையவுள்ள இரண்டாவது விமான நிலையம் நிச்சயம் பலனை தரும் என்கின்றனர். இதுபற்றி கிருஷ்ணகிரி பகுதியை தொழில் முனைவோர், அதிகாரிகள், வல்லுநர்களிடம் பேசுகையில், மூன்று முக்கியமான விஷயங்களை சுட்டிக் காட்டினர்.
1) ஓசூர் டூ பெங்களூரு ஏர்போர்ட் – பயண நேரம் குறையும்
தற்போதைய சூழலில் கெம்பகவுடாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஓசூரில் இருந்து செல்ல சுமார் 80 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்கின்றனர். அதுவே தெற்கு பெங்களூருவில் புதிய விமான நிலையம் வந்துவிட்டால் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் மட்டும் பயணித்தால் போதும். பயண நேரம் ஒரு மணி நேரத்திற்கும் கீழ் குறைந்துவிடும்.
2) சரக்கு போக்குவரத்து செலவுகள் மிச்சம்
ஓசூரை பொறுத்தவரை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் ஹப்பாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 3,000க்கும் மேல் செயல்பட்டு வருகின்றன. இதில் டிவிஎஸ், அசோக் லேலண்ட், டைட்டன், ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
இங்கிருந்து தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சென்னை ஏர்போர்ட் அல்லது கெம்பகவுடா ஏர்போர்ட்டிற்கு கொண்டு செல்ல அதிக செலவாகும். அதுவே தெற்கு பெங்களூருவில் விமான நிலையம் வந்துவிட்டால் சரக்கு போக்குவரத்திற்கான செலவுகள் குறையும். விரைவாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
3) ஐடி வேலை வழங்கும் நிறுவனங்களின் புதிய முதலீடுகள்
எலக்ட்ரானிக் சிட்டி, ஜிகானி, பொம்மசந்திரா உள்ளிட்ட தெற்கு பெங்களூருவில் உள்ள பகுதிகளில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றை நம்பி வேலை செய்வோர் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி ஓசூரிலும் ஐடி நிறுவனங்களும், பூங்காக்களும் அமைந்துள்ளன.
இவற்றை விரிவுபடுத்துவதற்கு சாதகமான சூழலை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் புதிய விமான நிலையத் திட்டத்தால் விரிவுபடுத்தும் திட்டங்கள் மட்டுமின்றி, புதிய ஐடி முதலீடுகளும் குவியும் சூழல் ஏற்படும்.
பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு கனெக்ஷன்
இதுதவிர ஓசூரை கனகபுரா ரோடு மற்றும் ராமநகரா ஆகிய பகுதிகள் உடன் இணைக்கும் வகையில் சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன்மூலம் பெங்களூரு நகரின் மத்திய பகுதிகளுக்குள் செல்லாமல் சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல முடியும். பயணமும் எளிதாகும்.
