தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, 80 வயதை நடந்த பிறகும் பல படங்களை இசையமைத்து வருகிறார். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட இளையராஜா, திருவண்ணாமலையில், கிரிவலம் பிரபலமான நான் தான் முக்கிய காரணம் என்று ஒரு நிகழச்சியில் பேசியுள்ளார்.
க்ளாசிக் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளனராக இருந்தவர் இளையராஜா. தொடர்ந்து 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், புதுமுக இயக்குனர்கள் பலரும் இவரை தேடி வர தொடங்கினர்.
அதேபோல், முன்னணி இயக்குனர்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்த இளையராஜா, தனது இசை மற்றும் பாடல்கள் மூலமாகவே பல படங்களை ஹட்டாக்கியுள்ளார் என்று பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கூறியுள்ளனர். தற்போது 80 வயதை கடந்துள்ள இளையராஜா இன்றும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில், பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இவரது பாடல்கள் இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் நிலையில், இவரின் நடவடிக்கைகள் அவ்வப்போது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
தனது பாடல்களை வெளியில் பயன்படுத்த கூடாது என்று காப்புரிமை வழக்கு தொடுப்பது, தனது நண்பரும், பாடகருமான எஸ்.பி.பி தனது பாடல்களை மேடையில் பாட கூடாது என்று கூறியது என பல சம்பவங்கள் இளையராஜாவுக்கு கடுமையாக விமர்சனங்களை பெற்று கொடுத்தது. இசையில் பல சாதனைகளை படைத்துள்ள இளையராஜா, ஆன்மீகத்தில் அதிக நாட்டத்துடன் இருந்து வரும் நிலையில், தற்போது திருவண்ணாமலை குறித்து அவர் பேசிய கருத்துக்கள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இளையராஜா, பவுர்ணமி அன்று மலை சுற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். நான் மலை சுற்றுவதை பார்த்து தான் அதிகமான மக்கள் மலை சுற்றுவதை பின்பற்ற தொடங்கினர்கள் என்று அண்ணாமலையில் (திருவண்ணாமலை) உள்ளவர்கள் சொல்வார்கள். ஏனென்றால் நாங்கள் நடக்கும்போது பகவான் ரமணருக்கு சேவை செய்த குருஜி சாமிகளும் நானும், மட்டும் தான் நடந்து போவோம். அவர் தான் என்னை முதன் முதலில் கிரிவலம் அழைத்து சென்றார்.
கிரிவலம் சுற்றும்போது நானும் லிங்கம் மட்டும் தனியாக இருக்கிறோம். அந்த இடத்தில் அவ்வளவு வைபிரேஷன் இருக்கும். இந்த லிங்கம் ஞானசம்பந்தர் பாடியதை கேட்டிருக்கும் என்று நினைக்கும்போது உடல் புல்லரிக்கிறது. நான் நடக்கும்போது அந்த வைபிரேஷன் என்னை போட்டு அமுக்குகிறது. அதன்பிறகு 3 மாதங்கள் கழித்து தான் பாட கிடைத்த பரம்பொருளே, பாடல் பிறந்தது. இது நான் யோசிக்கவில்லை. அதுவாக வந்தது. ஆண்டவன் கொடுத்தது என்று இளையராஜா கூறியுள்ளார்.
