காவலர் (போலீஸ்) முன்னிலையிலேயே கைதி ஒருவர் மருத்துவரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம், வர்தா மாவட்டத்தில் உள்ள தலேகாவ் ஷியாம்ஜி பந்த் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று 5 காவல்துறையினரின் பாதுகாப்புடன் காதிர் அலி ரசாக் அலி என்ற கைதி மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டார். மருத்துவ பரிசோதனையின் போது கைதி காதிர், எதிரில் இருந்த பெண் மருத்துவரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனைச் சற்றும் எதிர்பாராத அந்த மருத்துவர் திகைத்துப்போனார். இதையடுத்து, உடனடியாக அருகிலிருந்த காவல்துறையினர் கைதியை மடக்கிப் பிடித்து, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, கைதி காதிர் அங்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இந்நிலையில், எதிர்பாராத கைதியில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏர்அடுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், பலரும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கைதி காதிர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்துத் தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
