`பெத்தி' படப்பிடிப்பின் போது நடந்த விபத்து; கோவை மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், ‘பெத்தி’ திரைப்பட படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கோவையில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு நடிகர் ராம் சரண் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக நேற்று வருகை தந்தார். பின்னர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அம்மருத்துவமனை தலைவரும், எலும்பியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் எஸ்.ராஜசேகரன் தலைமையில் ராம் சரணுக்கு இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிக்கலான மணிக்கட்டு காயம் என்பதால், அமெரிக்காவின் மியாமியைச் சேர்ந்த கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அலெஜான்ட்ரோ பாடியா சிறப்பு அழைப்பாளராக மருத்துவக் குழுவில் இணைந்திருந்தார். மேலும், டாக்டர் பிரவீன் பரத்வாஜ் உள்ளிட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவும் அறுவை சிகிச்சையில் பங்கேற்றது.

ராம் சரண்

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், ராம் சரண் தற்போது நலமாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விரைவில் வழக்கமான பயிற்சியைத் தொடங்கி, அதன் பின் மீண்டும் திரைப்படப் பணிகளில் ஈடுபடுவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். சிகிச்சையின்போது, நடிகர் சிரஞ்சீவி, சுரேகா கொனிடேலா மற்றும் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் உடனிருந்தனர். விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் ராம் சரண் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

Source link