பெரியார் தனது இயக்கத்தை ஜனநாயக முறையில் நடத்தவில்லை என்பது உண்மைதான்; ஆனால்…’: தமிழ்ச் செல்வன் புகாருக்கு விடுதலை ராஜேந்திரன் பதில்

பெரியாரின் செயல்பாடுகள் மற்றும் கீழ்வெண்மணி சம்பவம் குறித்தான அவரது நிலைப்பாடு குறித்துச் சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் திராவிட – இடதுசாரி சிந்தனையாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், “பெரியார் ஒற்றைப்படைத் தளபதியாகச் செயல்பட்டது சமூக ஜனநாயகத்திற்காகத்தானே தவிர கட்சியின் ஜனநாயகத்திற்காக அல்ல” என்று பதிலளித்துள்ள திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், காரல் மார்க்ஸ் மற்றும் புத்தரைக் மேற்கோள்காட்டி தமிழ்ச்செல்வனுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

பெரியாரின் செயல்பாடுகள் மற்றும் கீழ்வெண்மணி சம்பவம் குறித்தான அவரது நிலைப்பாடு குறித்துச் சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜூலை 18-ம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பெரியார் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “பெரியாருக்கு நாம் கொடுக்கும் மரியாதையெல்லாம் சரிதான், ஆனால் தஞ்சையின் வரலாற்றுப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் ஒன்றும் கிடையாது. 1954-ல் ‘திராவிட விவசாய தொழிலாளர் சங்கம்’ என்ற அமைப்பை அவர் தொடங்கினார். பெரியாரின் அமைப்பில் ஜனநாயகம் என்பதெல்லாம் கிடையாது. யாருடனும் கலந்து ஆலோசிக்காமல், திருச்சியில் இருந்தபோது தோன்றியது என்பதற்காகவே தன்னிச்சையாக அந்தச் சங்கத்தைத் தொடங்கினார். ‘நான் சொல்வதுதான் சட்டம், அதுவே என் சாசனம்’ என்ற முறையில் தான் அவரது இயக்கம் செயல்பட்டது” என்று விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ச.தமிழ்ச்செல்வன், “கம்யூனிஸ்டுகள் என்றால் வன்முறையாளர்கள் என்றே பெரியார் சாகும் வரை நினைத்துக் கொண்டிருந்தார். கூலி உயர்வுக்காகப் போராடுவதையே வன்முறை என்று அவர் கருதினார். விடுதலை பத்திரிகையில் வெண்மணி சம்பவம் குறித்து எழுதிய கட்டுரையில், கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் கட்சியே இருக்கக் கூடாது; காங்கிரஸ், தி.மு.க என இரண்டே கட்சிகள் இருந்தால் போதும் என்று எழுதியுள்ளார்.”

“44 பேரைத் தீவைத்துக்கொளுத்திய வெண்மணி சம்பவத்தை, இரு கட்சிகளுக்கு இடையே நடந்த பிரச்சனையாகவே பெரியார் பார்த்தார். அதில் சங்கம், கோபாலகிருஷ்ண நாயுடு, செங்கொடி இயக்கம் எதுவுமே இல்லை. மேலும், இந்தியர்கள் இந்தியாவை ஆளக் கூடாது, அமெரிக்காகாரனோ ரஷ்யாக்காரனோ ஆளட்டும் என்றும் எழுதியிருக்கிறார். இதையெல்லாம் பார்த்தால் பைத்தியக்காரத்தனமாக எழுதுவது போலத் தோன்றும். ஆ.ராசா போன்றவர்கள் இந்த வரலாறையெல்லாம் படிக்காமல் வாய்க்கு வந்ததைப் பேசித் திரிகிறார்கள்” என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

“முதலாளிகளுடனும் பண்ணையார்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தாமல் கம்யூனிஸ்டுகள் எதிரியாக்கி அடிதடியாக மாற்றுகிறார்கள் என்பது பெரியாரின் குற்றச்சாட்டு. ஆனால் பண்ணையார்கள் என்றைக்காவது பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறார்களா? பேச்சுவார்த்தைக்கு வரவைப்பதற்காகவே கம்யூனிஸ்டுகள் போராடி சிறை சென்றார்கள். இந்த வரலாற்றைப் படித்துவிட்டு பெரியார் சொன்னதைப் படித்தால் சிரிப்புதான் வரும்” என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் இந்தப் பேச்சுக்கு எதிராகவும், பெரியாரின் நிலைப்பாட்டை விளக்கியும் பெண்ணியவாதி ஓவியா மற்றும் பெரியாரியவாதி ஆதி அசுரன் உள்ளிட்டோர் மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது திராவிட – இடதுசாரி சிந்தனையாளர்களிடையே காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், பெரியார் தனது இயக்கத்தை ஜனநாயகபூர்வமாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் தோழர் தமிழ்ச்செல்வன்; இது முற்றிலும் உண்மை என்றும் ஏன் அப்படி செயல்பட்டார் என்று விளக்கியுள்ள விடுதலை ராஜேந்திரன், மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எப்படி தயாரித்தார்” என்று ச. தமிழ்ச்செல்வனை நோக்கி எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பெரியார் தனது இயக்கத்தை ஜனநாயகபூர்வமாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்; முற்றிலும் உண்மை ஒற்றைப்படை தளபதி ஆக அவர் இயக்கத்தை வழி நடத்தியது சமூக ஜனநாயகத்திற்காக; தனது கட்சியின் ஜனநாயகத்துக்காக அல்ல.

எந்த விவாதமும் ஆலோசனையும் இல்லாமல் தனக்கு தோன்றியதால் திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தை பெரியார் தொடங்கினார் என்பது அவரது மற்றொரு விமர்சனம்
தனது கம்யூனிஸ்ட் கட்சி அப்படிப்பட்டதல்ல என்று பெருமை பேசுகிறார்.

மார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை அறிக்கையை எப்படி தயாரித்தார்?

1848-ல் லண்டனில் ஆறு வார காலம் 

தான் மட்டும் தனியே உட்கார்ந்து தனக்கு தோன்றியதை 
எந்தவித விவாதமும்  இல்லாமல் அவரே தயாரித்து
1848 பிப்ரவரி 21ல் வெளியிடப்பட்டது தான் அந்த அறிக்கை. அதற்குப் பிறகுதான் அந்த அறிக்கையில் என்ன இருந்தது என்பது உலகிற்கு தெரிய வந்தது.

காரல் மார்க்ஸ் விவாதங்கள் நடத்தி எழுதவில்லை தனக்கு தானே எழுதிக் கொண்ட அறிக்கை என்று தோழர் தமிழ்ச்செல்வன் கூறுவாரா?  தனக்கு தோன்றியதை தானே எழுதிக் கொண்டார் என்று கிண்டல் அடிப்பாரா?

வரலாறுகள் உருவாக்கும் தலைவர்கள் தங்கள் சிந்தனை வழியில் தான் சமூக மாற்றங்களுக்கு வித்திட்டு இருக்கிறார்கள் என்ற புரிதல் இன்றி பேசலாமா? புத்தரிடம் “பொலிட் பீரோ” இருந்ததா?

இடதுசாரிகளோடு நட்பும் தோழமையும் வளர வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் 

விவாதம் நடக்க வேண்டும் என்று தோழர்கள் விரும்பினால்அதற்கு தயாராகவே இருக்கிறோம்.” என்று விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Source link