இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை சார்பில் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டிற்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்திற்கு சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருது வென்றுள்ளது.
இந்த நிலையில் மூன்று தேசிய விருதுகள் வென்றுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் ஒட்டுமொத்த அமரன் குடும்பத்திற்கும் இது ஒரு பெருமைக்குரிய நாள். 72-வது தேசிய திரைப்பட விருதுகள் (2024) விழாவில், சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அன்பிற்குரிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த பின்னணி இசைக்காக கௌரவிக்கப்பட்ட ஜிவி பிரகாஷ் மற்றும் சிறந்த படத்தொகுப்பிற்கான விருதைப் பெறவுள்ள கலைவாணன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தேசிய விருதுகளை வென்ற சன் பிக்சர்ஸ், தனுஷ், சத்ய ஜோதி, அருண் மாதேஸ்வரன், அமல் அரசு, சுரேன், ஹரி ஹர சுதன், எட்மான்ட் ரான்சன் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
