புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 38 மருத்துவர்களையும் நூற்றுக்கணக்கான பொறியாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களை உருவாக்கிய கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நீட் தேர்வு வந்த பிறகு கடந்த 6 ஆண்டுகளில் 7.5% உள் இடஒதுக்கீட்டில் 29 மாணவிகளை பல்வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவம் படிக்க அனுப்பி உள்ளது. அதில் 7.5% உள் இடஒதுக்கீட்டில் முதலில் மருத்துவம் படிக்கச் சென்ற 4 மாணவிகள் மருத்துவப் படிப்பை முடித்துக் கொண்டு மருத்துவர்களாக வந்துள்ளனர்.
அதே போல, இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளில் தேவதர்ஷினி (519 மதிப்பெண்), மதனிகா (515 மதிப்பெண்), பிரியதர்சினி (509 மதிப்பெண்) என 3 மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 9 மாணவிகள் 450 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று மீண்டும் சாதித்து உள்ளனர். இந்த ஆண்டும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டில் அதிகமான மாணவிகள் மருத்துவம் படிக்கச் செல்வார்கள் என்று பெருமையாக சொல்கிறார்கள் ஆசிரியர்களும் பெற்றோர்களும்.
மேலும், பெற்றோர்கள் கூறும் போது, ‘கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உருவாக்கப்பட்டது முதல் தொடர்ந்து சாதித்து வருகின்றனர். நீட் வருவதற்கு முன்பே +2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று 9 மாணவிகள் மருத்துவம் படித்து இன்று பல ஊர்களிலும் அரசு மருத்துவர்களாக உள்ளனர். சொந்த ஊரிலேயே மருத்துவராக உள்ளனர். அதன் பிறகு நீட் வந்த பிறகு இனி எப்படி நம் பிள்ளைகள் மருத்துவர்களாக படிக்க முடியும் என்ற கவலையாக இருந்த போது தான் அரசுப் பள்ளி மாணவர்களின் கவலையை உடைத்து மருத்துவக் கனவை நினைவாக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது. இந்த அரசாணை வெளியான முதல் வருடத்திலேயே 4 மாணவிகள் மருத்துவக் கல்லூரிகளுக்குள் அடியெடுத்து வைத்தனர். ஒரே பள்ளியில் படித்த 4 மாணவிகள் மருத்துவம் படிக்கச் சென்றது பெருமையாக இருந்தது. அடுத்த ஆண்டு 7 மாணவிகள் சென்றனர். இப்படி கடந்த 6 ஆண்டுகளில் 29 மாணவிகள் மருத்துவக் கல்லூரிகளுக்கு படிக்கச் சென்றுள்ளனர்.
இது மாவவட்டத்தில் அதிக மாணவிகளை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிய ஒரே அரசுப் பள்ளி என்ற பெருமையும் பெற்றுள்ளது. அதே போல அந்த சாதனையை இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ள மாணவிகளும் தக்க வைத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாபெரும் சாதனை எப்படி சாத்தியம் என்று தமிழ்நாட்டின் பல ஊர்களில் இருந்தும் இன்று வரை கேட்கின்றனர். அதற்கு காரணம் ஈகோ இல்லாத ஆசிரியர்கள் – மாணவிகளின் நலனில் முழு அக்கறை கொண்ட பெற்றோர்களின் கூட்டு முயற்சியும், சாதிப்போம் என்ற மாணவிகளின் மனதிடமும் தான் காரணம். அதாவது, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கிராமப்புற ஏழை மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் போது பெற்றோர் ஆசிரியர் கழகம், மாணவிகளின் பள்ளிகளின் தேவை அறிந்து தேவையானவற்றை பூர்த்தி செய்து கொடுத்தனர். ஆசிரியர்கள் மாணவிகளுக்கு மாலை நேர வகுப்பு நடத்தும் போது மாணவிகள் சோர்வை போக்க சத்தான சிற்றுண்டிகளை வழங்கினர். பல தேவைகளை பூர்த்தி செய்தனர்.
தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் – பெற்றோர் ஆசிரியர் கழகம் – எஸ்எம்சி, முன்னாள் மாணவிகள் ஆகியோரின் ஒருங்கிணைப்பும் மாணவிகளின் விடாமுயற்சியும் தான் இன்று சாதனைப் பள்ளியாக சாதித்து வரக் காரணமாக உள்ளது. இந்த ஒருங்கிணைப்பு உடையுமேயானால் மாணவிகளின் சாதனையிலும் சறுக்கல் வந்துவிடும். ஆனால் எத்தனை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாறினாலும் கூட பெற்றோர்களுடன் இணக்கமான ஒருங்கிணைப்போடு செயல்படுவதால் இந்த முன்னேற்றம் அடைந்துள்ளது’ என்றனர். இந்தப் பள்ளியின் தொடர் சாதனையைப் பார்த்து மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் மாணவிகளை கொண்டு வந்து சேர்க்கின்றனர் பெற்றோர்.
