பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி; அடுத்தடுத்த நடந்த பா*யல் வன்கொடுமை!

வீட்டை விட்டு ஓடி வந்த 15 வயது சிறுமியை 2 பேர் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலியை மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் தேர்வில் ஃபெயில் ஆனதை பெற்றோர் கண்டித்ததால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், மகளை காணவில்லை என தலையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காணாமல் போன சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

அதன்படி கடந்த அக்டோபர் 17ஆம் தேதி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்த சிறுமியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அதாவது வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி தனது காதலன் மற்றும் அவரது நண்பர் இருவருடன் ரயில் மூலம் திருச்செந்தூர் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர்கள், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தங்களை போலீசார் தீவிரமாக தேடுவதாக தங்களது பெற்றோர்கள் மூலம் அறிந்த அந்த நபர்கள், சிறுமிக்கு சிறிது பணத்தைக் கொடுத்துவிட்டு திருச்செந்தூர் ரயில்வே நிலையத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் தனியாக நின்றுக் கொண்டிருந்த சிறுமியை கண்ட மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (26), சண்முகசுந்தரம் மற்றும் மணி (28) ஆகிய 3 பேரும் அவருக்கு உதவி செய்வதாகக் கூறியுள்ளனர். அவர்களின் வார்த்தைகளை நம்பிய சிறுமியை, 3 பேரும் தசரா பண்டிகையை கொண்டாட குலசேகரப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்த சிறுமியை மணி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சண்முகசுந்தரத்துடன் ஊரை விட்டு ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து விவாகரத்தான கார்த்திக், சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வாடிப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கார்த்திக், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, உள்ளூர் மக்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இதையடுத்து அக்டோபர் 17ஆம் தேதி சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மணி மற்றும் சண்முகசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். அதே போல், கார்த்திக் திண்டுக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், சிறுமிக்கு ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த இரு சிறுவர்களையும் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.