சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவோடு ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகாசக்தி’ எனும் முன்னோட்டம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதில் புராணக் கதைகள், நிகழ் கால காட்சிகள் இடம் பெற்றிருந்தது. பின்பு இம்மாதம் கடந்த 21ஆம் தேதி ‘வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி’ எனும் முன்னோட்டம் வெளியானது. இதிலும் புராணக் கதைகள் இடம் பெறக் கூடுதலாக போர் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதனால் புராணக் கதை பின்னணியில் ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி கலந்த சாமி படமாக உருவாகியுள்ளது.
இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் நயன்தாரா பட அனுபவம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “சில திரைப்படங்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட, நம் இதயத்திற்கு நெருக்கமானவையாகவே இருக்கும். அந்த வகையில் எனக்கு மூக்குத்தி அம்மன் 2 படம் அப்படி இருந்தது.
இயக்குநர் சுந்தர் சி, தொலைநோக்குப் பார்வை, கனிவு மற்றும் அர்ப்பணிப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். அதற்காக் அவருக்கு நன்றி. உங்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் காட்டிய அக்கறைக்கும், இந்தப் பயணத்தை இவ்வளவு மறக்க முடியாத ஒன்றாக மாற்றியமைத்ததற்கும் நன்றி. இந்தப் படத்திற்காக நான் உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்.
தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், படத்தின் மீது நம்பிக்கை வைத்து, எங்களுக்கு ஆதரவளித்தார். அதற்காக அவருக்கு நன்றி. ஒரு கதையை முழு மனதுடன் நம்பும் தயாரிப்பாளர் கிடைப்பது, இந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது. ரெஜினா, இந்தப் பயணத்தை உன்னுடன் பகிர்ந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உனது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் உனக்கு அன்பும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
குஷ்பு மேடம் மற்றும் சினேகா மேடம், உங்களுடன் இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றியதை நான் எப்போதும் பொக்கிஷமாகக் கருதுகிறேன். உங்கள் இருவருக்கும் என் அன்பையும், மனமார்ந்த அரவணைப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வளவு அற்புதமான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். நாங்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய இந்த உலகத்தை, நீங்கள் அனைவரும் திரையில் காணும் தருணத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றுள்ளார்.
