பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா; விவாதங்களுக்குப் பிறகு மக்களவையில் நிறைவேற்றம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக கல்வித்துறை மிகவும் மோசமடைந்துள்ளதை சுட்டிக் காட்டி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கினர். டெல்லியில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டம், கடந்த ஜூலை 20 அன்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த போராட்டம் வலுவடையத் தொடங்கியது.  

தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டத்தினால் செய்வதறியாத ஒன்றிய அரசு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து அவர்களின் மூன்று கோரிக்கைகளையும் ஏற்றது. அதாவது, தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது, நீட்டால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் மற்றும் அவர்களை வருங்காலங்களில் இந்த போராட்டத்தின் காரணமாக அவர்கள் மீது அரசு பழி வாங்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனக் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இந்த கோரிக்களை அரசு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த போராட்டத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரும்பப் பெற்றனர்.

இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா 2026ஐ நாடாளுமன்ற மக்களவையில் மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கடந்த 27ஆம் தேதி அறிமுகத்தினார். இந்த மசோதாவில், வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.50 லட்சம் வரை அபராதமும், முறைகேடு கும்பலால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட அம்சங்களும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

இந்த மசோதா மீதான விவாதங்கள் கடந்த 2 நாட்களாக மக்களவையில் தொடர்ந்து நடைபெற்றது. இந்த மசோதாவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என நாடாளுமன்ற எம்.பிக்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை இரண்டு நாட்களாகத் தெரிவித்தனர். இன்றும் (29-07-26) விவாதம் தொடர்ந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த குரல் வாக்கெடுப்பில் மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினர். அதனை தொடர்ந்து, ‘பொதுத் தேர்வு முறைகேடுகளை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெறும். அங்கு ஒருவேளை நிறைவேற்றப்பட்டால் இந்த சட்டம் முழுமையாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source link