நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் எதிரொலியாக இந்த போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து, மத்திய அரசுக்கு நெருக்கடியாக மாறியது.
இதனையடுத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் (25.07.2026) ராஜினாமா செய்தார். இந்நிலையில் பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா, 2026-ஐ நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கும் மத்தியில் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் இன்று (27.07.2026) அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து மசோதா அறிமுகத்திற்கு மக்களவை குரல் வாக்கெடுப்பு மூலமாக அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த மசோதா அறிமுகப்படுத்திய சில நிமிடங்களிலேயே, அவையில் ஏற்பட்ட கடும் கூச்சல் மற்றும் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இந்த மசோதா குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாடு முழுவதும் உள்ள மாணவர்களால் எழுப்பப்பட்ட கவலைகளைக் கருத்தில் கொண்டு, வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இன்று மக்களவையில் ஒரு முக்கியமான மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதனைப் பற்றி விவாதிக்க மறுப்பதுடன், அவையில் கூச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். பிரதமர் இன்று எடுத்துள்ள மிக முக்கியமான முடிவை அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தேர்வு முறையை சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பணிக்குழு (டாஸ்க் ஃபோர்ஸ்) அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் எந்தவொரு வினாத்தாள் கசிவும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், தேர்வு முறையை சீர்திருத்துவதற்கும் ஒரு புரட்சிகரமான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவில் ஈடுபடும் எவருக்கும் கடுமையான மற்றும் காலவரம்பிற்குட்பட்ட தண்டனை வழங்குவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் விவாதத்திற்கு அனுமதிக்கவில்லை என்றால், அது தவறான செய்தியைக் கொண்டு சேர்க்கும். நாட்டின் மற்றும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுமாறு காங்கிரஸ் கட்சிக்கு நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்.
நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எங்கு நாம் இந்த விவகாரங்களை விவாதிக்க முடியும்? காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியில் உள்ள நமது சக உறுப்பினர்களுக்கும் நான் மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு முக்கியமான மசோதாவை நாங்கள் கொண்டு வருகிறோம். அவையில் அமளியில் ஈடுபடுவதற்குப் பதிலாக, மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நாடாளுமன்றத்தில் முழுமையான மற்றும் திறந்த விவாதத்தை நாம் நடத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
