சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அது மட்டுமல்லாமல் கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டம் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் எனவும், மிக கனமழை பெய்யலாம் எனவும் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,”கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 25ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 26ஆம் தேதி காலை வாக்கில் வங்கக்கடலில் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவாகும் இந்தப் புயல் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 28ஆம் தேதி காலை ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகே மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ள வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனுடன் தொடர்புடைய வளிமண்டலச் சுழற்சியும் நீடிப்பதால், தமிழகத்தின் மழை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (அக்டோபர் 24) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அங்கு இடி, மின்னலுடன் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.
