அ.தி.மு.க, அ.ம.மு.க. மற்றும் ஓ.பி.எஸ். அணிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த புகழேந்தி கோவை உடையாம்பாளையம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் 4 மாணவிகளுடன் காரில் சென்று விபத்தில் சிக்கினார். விபத்து நடந்தவுடன் மற்றவர்களை அப்படியே விட்டுவிட்டு பிரவீன் மட்டும் தப்பி ஓடிவிட்டார். 2 நாட்களுக்குப் பிறகே காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கை திசைதிருப்பினார்.
விபத்தில் சிக்கிய வீரசுரேகா என்ற பெண் கொடுத்த வாக்குமூலத்தை அரசு கண்டு கொள்ளாமல் பிரவீனை தப்பவிட்டது. இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். தற்போது இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கொலை வழக்கில் தொடர்புடைய பிரவீனுக்கு அதிமுகவில் பொறுப்பு கொடுத்துள்ளனர். வீரசுரேகா என்ற பெண்ணிற்காக நான் பெண்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன்” என்றார்.
அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் பேசுகையில்,
“அ.தி.மு.க. முற்றிலும் அழிந்துவிட்டது. அ.தி.மு.க.வில் உள்ள 25 எம்.எல்.ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவாகவே உள்ளனர். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
எடப்பாடி பழனிசாமிக்கு பக்கத்தில் மதுரை, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, திருவண்ணாமலையில் ‘சகுனிகள்’ உள்ளனர். நேற்றைய அதிமுக கூட்டத்தில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஜெயராமனுக்கு நாவடக்கம் வேண்டும்.
முறைத்துக் கொண்டிருக்கும் எம்.எல்.ஏ-க்களின் கால்களில் விழுந்து புதிய தலைமையை உருவாக்கினால் மட்டுமே அதிமுக மீண்டும் உயிர் பெறும். இல்லையெனில், எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிவார்கள் அல்லது அனைவரும் தவெகவுக்கு வந்துவிடுவார்கள். எடப்பாடி பழனிசாமி நாசமாகப் போக பொள்ளாச்சி ஜெயராமன் தான் காரணம்.
பொள்ளாச்சி சம்பவம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவங்களை சிபிஐ தான் உண்மை நிலையைக் கண்டறிந்தது. அன்றைய அதிமுக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை, அதற்குப் பிறகு வந்த திமுக அரசும் எதுவும் செய்யவில்லை. இருவருமே கூட்டுகளவாணிகள்” என்று புகழேந்தி ஆதங்கத்துடன் கூறினார்.
தொடர்ந்து ‘ஜனநாயகன்’ திரைப்படம் மற்றும் பிற கருத்துகளை பகிர்ந்து கொண்ட புகழேந்தி
“தேர்தலுக்கு முன்பே வர வேண்டிய ‘ஜனநாயகன்’ படத்தை தடை செய்திருந்தனர். தற்போது படம் வெளியாகியுள்ளதால் தடை செய்தவர்களுக்கு வயிறு எரிந்திருக்கும். ‘அடிமைப்பெண்’ படம் வெளியானபோது ஊர்வலமாகச் சென்று பார்த்த ஞாபகம் இப்போது வந்தது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியபடி அமைச்சர்கள் பலர் கண்ணீர் உருக்கமாகப் படம் பார்த்தனர்.
உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் முதலமைச்சர் குறித்து இழிவாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு மனநலக் கோளாறா என்று தெரியவில்லை. இதேபோல் பேசினால் சிறைக் கதவுகளுக்குப் பின் இருக்கும் நிலை ஏற்படும்.
தவெகவுக்கு வருபவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். தவறுகளுக்கு தவெக அரசு துணை நிற்காது.
டெல்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டம் பாராட்டிற்குரியது. இது பிரதமர் மோடிக்கு விழுந்த பெரிய அடி, இதிலிருந்து அவரால் மீண்டு வர முடியாது”
இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.
