போ*தைப்பொருள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்; 2 காவலர்கள் மீது அதிரடி ஆக்‌ஷன்!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சுகன் என்பவரிடம் கடந்த 15ஆம் தேதி 135 கிலோ அளவிலான போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இவை பல கோடி மதிப்பிலானவை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சுகன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது.

அதாவது இந்த போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், சுகனின் நண்பரான வழக்கறிஞரும் தவெக மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான பூபாலன் என்பவரின் தூண்டுதலின் பெயரில் இந்த கடத்தல் அரங்கேறியதாகவும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிந்தாமணி பகுதியில் பூபாலனை கைது செய்து அவரது வீட்டில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில், பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், லேப்டாம், பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி பூபாலனை தவெகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையில் பூபாலன், சுகன் உள்ளிட்ட 5 பேரை வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் 2 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பதை அறிய முன்னாள் தவெக நிர்வாகி பூபாலன் மற்றும் அவருடைய நண்பர் சுகன் ஆகியோரின் செல்போன்களை ஆய்வு செய்து தகவல் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக காவலர்கள் சிவா மற்றும் பெண் காவலர் சங்கீதா ஆகியோர் சுகனிடம் கையூட்டு பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த அடிப்படையில் 5க்கும் மேற்பட்ட காவலர்களுடன் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி டிஎஸ்பியின் ஓட்டுநர் சிவா, வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் சங்கீதா ஆகியார் தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.