போனி கபூர் திருமணம், நாள் முழுவதும் கதறி அழுத பிரபல நடிகர்: ஒரே படத்தில் பான் இந்தியா ஸ்டார் ஆன அவர் யார்?

எழுதியவர்: யஷஸ்வினி ஸ்ரீ

புஷ்பா மற்றும் புஷ்பா 2 படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக வளர்ந்துள்ள நடிகர் அல்லு அர்ஜுன், மறைந்த நடிகை ஸ்ரீதேவி மீது தனக்கு சிறுவயதிலிருந்தே ஆழமான ஈர்ப்பு இருந்ததாகவும், அவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட செய்தியை அறிந்தபோது நாள் முழுவதும் அழுததாகவும் கடந்த காலத்தில் அளித்த பேட்டியில் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஸ்ரீதேவி மீது எனக்கு அளவுகடந்த ஈர்ப்பு இருந்தது. அவரை நான் மிகவும் நேசித்தேன். அவரைப் போல வேறு யாரையும் நான் பார்க்க முடியாது என்று நினைத்தேன். அவர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார் என்று தெரிந்தவுடன், நாள் முழுவதும் அழுதேன். அந்த செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

ஸ்ரீதேவியும், போனி கபூரும் 1996 ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி மகாராஷ்டிராவின் ஷிர்டியில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே அந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த திருமணம் பல மாதங்கள் ரகசியமாக வைக்கப்பட்டது. பின்னர் 1997 ஜனவரியில், முதல் மகளான ஜான்வி கபூரை ஸ்ரீதேவி கருவுற்றிருந்தபோது இந்தத் திருமணம் பொதுமக்களுக்கு தெரியவந்தது.

அந்தக் காலகட்டத்தில், போனி கபூர் தனது முதல் மனைவி மோனா ஷோரியுடன் திருமண பந்தத்தில் இருந்தபோதே ஸ்ரீதேவியுடன் உறவு தொடங்கியதாகக் கூறப்பட்டதால், இந்தத் திருமணம் பாலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அல்லு அர்ஜுனைப் பொறுத்தவரை, ஸ்ரீதேவி மீதான அவரது ஈர்ப்பு ஒரு சாதாரண ரசிகரின் விருப்பமாக இல்லை. திரையுலகில் தான் பார்த்த எந்த நடிகையையும் விட ஸ்ரீதேவி தனித்துவமானவர் என்றும், அவர் மீதான தனது அன்பு உண்மையான பக்தியைப் போன்றது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அல்லு அர்ஜுன் மட்டுமல்ல, 1980 மற்றும் 1990-களில் வளர்ந்த ஒரு தலைமுறையினருக்கே ஸ்ரீதேவி இந்திய சினிமாவின் மிகப்பெரிய பெண் நட்சத்திரமாக விளங்கினார். 4 வயதிலேயே 1967-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான ‘கந்தன் கருணை’ மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, துபாயில் உள்ள ஒரு ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி, உயிரிழந்தார். 

இதற்கிடையில், அல்லு அர்ஜுன் தற்போது ஸ்நேகா ரெட்டியை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளார். இவர்களுக்கு அயான், அர்ஹா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’, இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

தற்போது இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பட வரிசையை கையில் வைத்திருக்கும் நடிகர்களில் அல்லு அர்ஜுனும் ஒருவர். இயக்குநர் அட்லீ இயக்கத்தில், தற்காலிகமாக AA22xA6 (ராக்கா) எனப் பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து மற்றொரு படத்திலும் அல்லு அர்ஜுன் பணியாற்றவுள்ளார்.

Source link