நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சுகன் என்பவரிடம் கடந்த 15ஆம் தேதி 135 கிலோ அளவிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அவை அனைத்தும் பல கோடி மதிப்பிலானவை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து சுகன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. அதாவது இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், பூபாலன் என்பவரின் தூண்டுதலின் பெயரில் இந்த கடத்தல் அரங்கேறியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து பூபாலன், சுகன் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேரும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இதில் பூபாலன் என்பவர் அடிப்படையாக வழக்கறிஞர், அதே சமயம் தவெக நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆனால் இந்த சம்பத்துக்கு பூபாலன் தவெக-வில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்பு கைதானவர்கள் நாகை சுங்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். பின்பு விசாரணை முடிந்த நிலையில் வேதாரண்யத்தில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி அக்.30 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் நாகை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அடுத்தக்கட்ட விசாரணைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதாவது இந்தக் கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறவுள்ளது.
