மக்களவை மழைக்காலக் கூட்டத்தொடரின் 7-வது நாளான செவ்வாய்க்கிழமை (ஜூலை 28), பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா 2026 (Public Examinations Amendment Bill, 2026) மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமரிசித்துப் பேசினார்.
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற ‘சன்சத் சலோ’ பேரணியின் போது மாணவர்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பிய பிரியங்கா காந்தி, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தடியடித் தாக்குதலுக்குள்ளான ஒரு மாணவி உயிருக்கு போராடி வருகிறார். ஜூலை 20 அன்று அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டுகள், நீர் பாய்ச்சும் கருவிகள், பெல்லட் குண்டுகள், ஏகே-47 துப்பாக்கிகளைப் பயன்படுத்த யார் அனுமதி அளித்தது? பிரதமரா அல்லது உள்துறை அமைச்சரா? பெண்கள் ஏன் தாக்கப்பட்டார்கள், அவர்களின் ஆடைகள் ஏன் கிழிக்கப்பட்டன? என்பதை காங்கிரஸ் மட்டுமின்றி முழு நாடும் கேட்கிறது என சாடினார். கல்வித் துறை அளவுக்கு அதிகமாக மத்தியமயமாக்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல்வி நிறுவனங்களில் புகுத்தப்பட்டு உள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், தேசிய தேர்வு முகமை வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்டு தேர்வு முறை சிக்கலாக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
நாட்டின் மொத்தக் கல்வி பட்ஜெட் ரூ.1.4 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், நீட் தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களிடம் இருந்து மட்டும் ரூ.1.32 லட்சம் கோடி வசூலிக்கப்படுகிறது. மேலும், பெருநிறுவனங்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ள நிலையில், கல்விக்கான பட்ஜெட் குறைவாக இருப்பது அரசின் தவறான முன்னுரிமையைக் காட்டுகிறது என்றார். கடந்த 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவுச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதற்குக் காரணமான வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) நடத்திய ஒருமாத காலப் போராட்டத்தைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது அவமானகரமான சூழ்நிலையில் நடந்தது. ஆனால், அவரது ராஜினாமாவுக்கு அடுத்த நாளே பாராளுமன்றத்தின் மகர் துவாரத்தில் ஆளும் கட்சி எம்பிக்கள் அவருக்கு ஆதரவாக ஜிந்தாபாத் என முழக்கமிட்டது கவலையளிக்கிறது. தேர்தல் வாக்குகள், ராமர் கோவில் நன்கொடைகள், பொதுச் சொத்துக்கள் மற்றும் விவசாயிகளின் நிலங்கள் எனப் பல “திருட்டுகள்” இந்த ஆட்சியின் கீழ் நடந்துள்ளன. ஆனால், இளைஞர்களின் எதிர்காலத்தையும் கனவுகளையும் திருடியதே இந்த அரசின் மிகப்பெரிய திருட்டாகும். பி.ஆர் (PR) விளம்பரங்கள், ஊடக கையாளுதல் மூலம் அரசு இந்த உண்மைய மறைக்கப் பார்க்கிறது.
காந்திய வழியில் உண்மையையும் அஹிம்சையையும் பின்பற்றி அமைதியாகப் போராடிய இளைஞர்களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். அரசு தனது அகந்தையைக் கைவிட்டு, நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், மாணவர்கள் அரசை வீழ்த்த வரவில்லை, கல்வி முறையின் மீது இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கவே போராடுகிறார்கள் என்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தினார். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை தாக்கல் செய்த பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா 2026 மீது மக்களவையில் செவ்வாய்க் கிழமை விவாதம் நடைபெற்றது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
