மும்பை:
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, கரப்பான்பூச்சி கட்சி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்துகிறது. மும்பையிலும் கடந்த வாரம் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், பங்கேற்ற நான்கு பேரை போலீசார் வீட்டு காவலில் வைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது.
வழக்கறிஞர் சவார் தேவ்ரே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், போலீசார் அத்துமீறி செயல்பட்டதாகவும், அமைதியாக போராட முயன்றவர்கள் மீது அடக்குமுறையை ஏவியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மனுவை, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா விசாரித்தனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அது அமைதியான முறையில் நடக்க வேண்டும். மஹாராஷ்டிராவில் போராட்டம் நடத்த போலீசார் அதிகப்படியான கட்டுப்பாடு விதித்ததை காண முடிகிறது.
அதே சமயம், போராட்டம் நடத்துபவர்களின் பின்னணி குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். போராட்டக்காரர்கள் எந்த குற்றப் பின்னணியும் கொண்டவர்களாக இருக்கக் கூடாது. அப்பாவி பொதுமக்கள் போர்வையில், குற்றவாளிகள் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
