நீட் மறுதேர்வில் 2-ம் இடம்பிடித்த மாணவர் பரபரப்பு பேட்டி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டம் ஒருபுறம் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் நீட் மறுதேர்வில் 2-ம் இடம் பிடித்த மாணவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள கே.ஆர்.மங்கலம் வேர்ல்ட் பள்ளியின் மாணவரான பன்சுல் பன்சால், மறுதேர்வில் 715 மதிப்பெண்களை பெற்றார். மேலும், 99.9999 பெர்சென்டைல் மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்த சூழலில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பன்சால், போராட்டத்தில் நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, நன்றாக படித்தால் கூடுதல் மதிப்பெண் பெற்று முன்னுக்கு வரலாம் என தெரிவித்துள்ளார். இவரது கருத்து பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
நீட் தொடர்பான விவாதத்திற்கு மத்திய அரசு தயார்
நீட் தொடர்பாக விரிவான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜனநாயக ரீதியான விவாதத்தை விடுத்து மோதலையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதே ராகுல் மற்றும் காங்கிரசின் நோக்கம் என விமர்சித்துள்ளார்.
மேலும், நீட் தேர்வு குறித்த இளைஞர்களின் நியாயமான கவலைகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், அரசியல் பிரச்சாரத்திற்கு கருவிகளாக பயன்படுத்துவதைவிட உரிய பதில்களை வழங்குவதே அரசின் கடமை எனவும் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் போராட்டத்தால் பொதுமக்களுக்கும் இடையூறு என தெரிவித்துள்ளார்.
சரக்கு கப்பல் மீதான தாக்குதலில் கேரள மாலுமி உயிரிழப்பு

உக்ரைனில் சரக்குக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களில் கேரளத்தை சேர்ந்த மாலுமியும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
காசர்கோடில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள கோயன் மகன் 26 வயதான அகில், அந்த கப்பல் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், வேறு வேலைக்கு மாறிவிட வேண்டும் என அகில் நினைத்திருந்தாராம். இந்த சூழலில், உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் அகில் உயிரிழந்துள்ளார்.
