காமராஜர் காலை உணவு திட்டம்; தொடக்க விழா செலவை தலைமை ஆசிரியர்கள் ஏற்க வேண்டுமா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

தமிழகத்தில் காமராஜர் காலை உணவு திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு ஆகும் செலவை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தான் செலவு செய்ய வேண்டும் என்று சுற்றிக்கை வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கு முன்பு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், தற்போது எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மேலும், இந்தத் திட்டம் ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயரில் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் காலை உணவு திட்டம் தொடர்பாக நிகழ்ச்சிக்கு ஆகும் செலவை பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, தன்னிடம் சில அதிகாரிகள் கூறியதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். 

இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கும் புகார் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புகாரின் அடிப்படையில் உண்மை நிலவரம் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இன்னசெண்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் சேர்ந்து தான் காமராஜர் காலை உணவு திட்டத்தின் நிகழ்ச்சிக்கான செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

Source link