போலி வங்கி கணக்கு தொடங்கி ரூ.30 கோடி மோசடி: கும்பல் நொய்டாவில் கைது

புதுடில்லி: கிரேட்டர் நொய்டாவில், போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்குகளை தொடங்கி, சைபர் குற்றவாளிகளுக்கு விற்று வந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கும்பல், 30 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், டில்லி பல்கலையின், ராம்ஜாஸ் கல்லுாரியில் படிக்கிறார். சமூக ஊடகத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து, குர்தி ஆர்டர் செய்து, 6,450 ரூபாயை, ‘ஆன் – லைன்’ வாயிலாக செலுத்தினார். ஆனால், அவருக்கு பார்சல் வரவில்லை. பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதுகுறித்து, டில்லி மாநகர போலீசின் குற்றப்பிரிவில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணப்பரிவர்த்தனை விபரங்களை ஆய்வு செய்தனர்.

மாணவி செலுத்திய பணம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவன வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து, 200 மொபைல் போன் எண்கள், ஐ.எம்.இ.ஐ., எண்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் ‘ஆன் – லைன்’ வர்த்தக தளங்கள், உணவு வினியோக செயலிகள் மற்றும் கூரியர் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, கிரேட்டர் நொய்டா போலீசுடன் இணைந்து டில்லி குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கிரேட்டர் நொய்டாவின் ஒரு நிறுவனத்தில் இருந்தஆதித்யா மிஷ்ரா,23, ஆயுஷ் வர்மா,22, அபிஷேக் பால்,23, ஹிமான்ஷு ராணா,29, ராகுல் குமார்,30, மற்றும் கவுரவ் பாண்டே,24 ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், உ.பி., மாநிலம் கான்பூரில் பதுங்கி இருந்த உதித் பிரதாப் சிங் பதவுரியா,22 என்பவர் கைது செய்யப்பட்டார்.

போலி நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பெயர்களில், 25 வங்கிக் கணக்குகளை தொடங்கி, சமூக ஊடகங்களில் போலி விளம்பரம் செய்து பண மோசடி செய்ததை ஒப்புக் கொண்டனர். மேலும், இந்த வங்கிக் கணக்குகள் வாயிலாக, 30 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆதித்யா மிஸ்ரா அளித்த வாக்குமூலத்தில், ‘கூட்டாளிகளுடன் இணைந்து போலி நிறுவனங்களை உருவாக்கி, அதன் பெயரில் நடப்பு கணக்குகளை தொடங்கினேன். அந்த வங்கிக் கணக்குகளை ராணா மற்றும் குமார் ஆகியோரிடம் மாதம், 25,000 ரூபாய்க்கு வாடகைக்கு அளித்தேன். இந்தக் கணக்குகள், வங்கி உபகரணங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டுகளுடன், பாண்டே மூலம் மேக்ஸ்வெல் மற்றும் சோலிடேர் ஆகியோருக்கு வழங்கினேன்’ என கூறியுள்ளார்.

எம்.பி.ஏ., பட்டதாரியான பாண்டே, இணையவழி மோசடியாளர்களுக்கு கமிஷன் அடிப்படையில் வங்கிக் கணக்குகளை வழங்குவதை ஒருங்கிணைத்துள்ளார். மேலும், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களை ஏற்பாடு செய்தல், இடங்களை வாடகைக்கு எடுத்து அந்த முகவரியில் நிறுவனங்களை உருவாக்கி, அதன் பெயரில் வங்கியில் நடப்புக் கணக்கு தொடங்குதல் ஆகிய வேலைகளை இந்த மோசடிக் கும்பல் செய்து வந்துள்ளது.

ஏழு பேரிடம் இருந்தும், 20 மொபைல் போன்கள், 45 சிம் கார்டுகள், 39 விற்பனை முனைய இயந்திரங்கள், 33 டெபிட் கார்டுகள், 28 காசோலை புத்தகங்கள், 15 ஸ்கேனர்கள், இரண்டு ‘லேப்-டாப்’கள், ஐந்து முத்திரைகள், ஆதார் மற்றும் பான் அட்டைகள், மற்றும் 21 வங்கிக் கணக்கு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை நடக்கிறது.

Source link