ஆக்ரா: உத்தரபிரதேசத்தில், இரு போலீசாரை கொலை செய்து தப்பிய நபர், இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், 27 ஆண்டுகளுக்கு பின், மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஆக்ராவைச் சேர்ந்தவர் புரா. இவர், 1999ல் நடந்த கொள்ளை முயற்சியை தடுத்த இரு போலீசாரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொன்றார். தப்பியோடிய இவரை பிடித்து கொடுப்பவர்களுக்கு, 50,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இவர் இறந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில், 27 ஆண்டுகளுக்கு பின் ம.பி.,யின் போபாலில் கைது செய்யப்பட்டார்.
போலீசார் கூறியதாவது:
போலீசாரை கொன்று தப்பியோடிய புரா, வனப்பகுதியில் சில ஆண்டுகள் வசித்துள்ளார். பின், ம.பி.,யின் இட்டார்சி நகரில் கூலித்தொழிலாளியாக பணியாற்றினார். தான் இறந்து விட்டதாக போலீசை நம்ப வைக்க, குடும்பத்தினரையும் அவர் தொடர்பு கொள்ளவில்லை. இறப்பு சான்றிதழையும் போலியாக வாங்கி உள்ளார்.
பின், போபாலுக்கு சென்ற அவர் கட்டுமான தொழில் செய்தார். லாரி டிரைவராகவும் பணியாற்றினார். அப்போது, தன் பெயரை ஜமீல் கான் என மாற்றி, திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு குழந்தைகளும் உள்ளனர்.
இதற்கிடையே, புராவின் கூட்டாளி சிறையில் இருந்து விடுதலையாகி, அவரது மைத்துனரை சந்தித்தார். அப்போது, புராவை இரு ஆண்டுகளுக்கு முன் சந்தித்ததாக கூறினார். இந்த தகவல் எங்களுக்கு தெரிய வந்ததை அடுத்து, புராவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. போபாலில் புராவை சுற்றி வளைத்து கைது செய்தோம்.
முதலில் மறுத்த அவர், உரிய விசாரணைக்கு பின், புரா என்பதை ஒப்புக்கொண்டார். குற்றச்சம்பவத்திற்கு பின்னர் அவர் எங்கெல்லாம் தங்கினார், அவருக்கு உதவியவர்கள் யார் என்பது பற்றிய விசாரணைகள் நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
