தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீதி கேட்டு உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (26) என்பவர், சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி தென்பாகம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், உடலில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருசாசலத்தை கைது செய்த போலீசார்
அருணாச்சலம், தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையுடன் இணைந்த பாரில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 17ஆம் தேதி, டாஸ்மாக் கடை மூடப்பட்ட பிறகும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, தென்பாகம் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து சுமார் 120 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து, விசாரணைக்காக அவரை தென்பாகம் காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அதே நாளில் மாலை, தலை மற்றும் காலில் பலத்த காயங்களுடன் அருணாச்சலத்தை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர், அவரது தாய் பரமேஸ்வரிக்கு இதுகுறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த அருணாச்சலம்
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உறவினர்கள், காவல்துறையினர் தாக்கியதால்தான் அருணாச்சலத்திற்கு தலை மற்றும் காலில் கடுமையான காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், விசாரணைக்காக அழைத்துச் சென்ற நான்கு காவலர்கள் தாக்கியதாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
மேலும், சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வரை அருணாச்சலத்தின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களுடன் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சுனில் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Source link
