திரைப்பட அமைப்பின் விழாவொன்றில் பங்கேற்றுப் பேசிய பிரபல இயக்குனரும் நடிகருமான ரவி மரியா, தற்போதைய ஆட்சியின் வெளிப்படைத்தன்மை மற்றும் திரையுலகின் கோரிக்கைகள் குறித்து நெகிழ்ச்சியுடனும் சுவாரசியமாகவும் உரையாற்றினார்.
தனது சமீபத்திய அனுபவத்தைப் பகிர்ந்த ரவி மரியா, “நேற்று இரவு என் நண்பருடன் நான் வழக்கமாகச் சாப்பிடும் சாலையோர உணவகத்திற்குச் சென்றிருந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த அந்த உணவக உரிமையாளரிடம் பேசியபோது, அவர் மிகவும் நெகிழ்ச்சியான ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் கவுன்சிலருக்கு ரூ.100, காவல்துறைக்கு ரூ.500 என நாள்தோறும் ரூ.1,000 வீதம் மாதத்திற்கு ரூ.30,000 வரை மாமூலாகக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், விஜய் சார் ஆட்சிக்கு வந்த பிறகு, யாரிடமிருந்தும் எந்தத் தொந்தரவும் இல்லை; லஞ்சப் புகார்களோ, மாமூல் வசூலோ இல்லாததால் எனக்கு மாதம் ரூ.30,000 மிச்சமாகிறது என்று மிக மகிழ்ச்சியோடு கூறினார்,” எனத் தெரிவித்தார்.
திரையுலகிற்கு ரவி மரியாவின் முக்கியக் கோரிக்கை:
தொடர்ந்து பேசிய அவர், திரைத்துறை தொடர்பான சில முக்கியமான கோரிக்கைகளையும் முன்வைத்தார்:
“மாநில அரசின் திரைப்பட விருதுகள் 5 முதல் 8 ஆண்டுகள் வரை தாமதமாகச் சேர்த்து வழங்கப்படுகின்றன. விருது பெறுபவர்கள் சிலர் உயிரோடு இல்லாத சூழல் கூட ஏற்படுகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்ததும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் விருதுகளை அறிவித்து வழங்கத் தனிக்குழு அமைக்க வேண்டும்.
சினிமா துறையிலிருந்து வந்த ஒருவரே இன்று முதலமைச்சராகவும், நமக்கு நன்கு அறிமுகமானவரே துறை அமைச்சராகவும் இருக்கும் இந்தக் காலத்தில் திரைத்துறையின் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் வேறு எப்போதுமே தீர்க்க முடியாது. சினிமா துறையைக் காப்பாற்றினால், தமிழ்நாட்டின் அத்தனை துறைகளையும் காப்பாற்றுவதற்குச் சமம்,” என்றார்.
