மகாராஷ்டிரா, கர்நாடகாவை முந்திய தமிழ்நாடு: பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடம்

சீனாவின் மகளிர் மைய மின்னணு உற்பத்தி மாதிரியை இந்தியாவில் பின்பற்றுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதை புதிய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிற மாநிலங்கள் இதில் மிகவும் பின்தங்கியுள்ளன. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 46 முக்கிய நகரங்களின் தொழிலாளர் சந்தை குறித்த சமீபத்திய அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் (Female Labour Force Participation Rate) தமிழ்நாட்டின் 2 நகரங்களான கோவை (41.3%), மதுரை (37%) ஆகிய 2 நகரங்கள் நாட்டின் முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளன. இது அகில இந்திய நகர்ப்புற சராசரியான 27.7%-ஐ விட மிகவும் அதிகமாகும். தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்பது ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் சதவீதத்தைக் குறிப்பதாகும்.

கோவைக்கும், மதுரைக்கும் இடையே சூரத் (40.6%) நகரம் 2-ம் இடத்தில் உள்ளது. இருப்பினும், கணிப்பொறிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ஒளியியல் பொருட்கள் உற்பத்தியில் (Computers, Electronics and Optical products) பணியாற்றும் பெண்களின் பங்கில் குஜராத்தின் வளர்ச்சி 2013-14 முதல் 2023-24 வரை 10% என்ற அளவிலேயே தேக்கமடைந்துள்ளது. ஆனால், இதே காலத்தில் தமிழ்நாட்டின் பங்கு 20%-லிருந்து 43%-ஆக உயர்ந்துள்ளது என ‘ஆண்டுத் தொழில் கணக்கெடுப்பு’ (ASI) தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்தத் துறையில் பணியாற்றும் பெண்களின் பங்கு கணிசமாகக் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா: 24%-லிருந்து 6%-ஆகக் குறைந்தது. கர்நாடகா 11%-லிருந்து 8%-ஆகக் குறைந்தது.

எந்தப் பொருளை உற்பத்தி செய்தாலும், இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் நேரடியாகப் பணியாற்றும் ஒட்டுமொத்தப் பெண்களின் சதவீதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2021-22ல் 43%-ஆக இருந்த இதன் பங்கு, 2023-24 இல் 40%-ஆக குறைந்திருந்தாலும், மாநிலம் தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் கணினிகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ஒளியியல் பொருட்கள் தயாரிப்பில் நேரடியாக வேலை செய்யும் பெண்களில் (ஒப்பந்தத் தொழிலாளர்கள் தவிர்த்து) கிட்டத்தட்ட பாதியளவு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது, மொத்தமுள்ள 34,531 பெண்களில் 14,814 பேர் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகலில், பெண்களுக்கான சிறப்பு தங்குமிடத்தை ஆகஸ்ட் 2024-இல் தமிழ்நாடு அரசும் ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனமும் இணைந்து திறந்த பிறகு, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT) சார்பில் ரூ.706.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகத்தில் 18,720 பெண் தொழிலாளர்கள் தங்க முடியும். MoSPI-ன் புதிய தரவுகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களை மட்டுமே உள்ளடக்கியதால், இது முழுமையான தமிழ்நாட்டின் படத்தைக் காட்டவில்லை. ஓசூர், ஈரோடு, ஒரகடம் போன்ற புதிய தொழிற்பேட்டைகள் 2011-இல் குறைந்த மக்கள்தொகையைக் கொண்டிருந்ததால் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

சமீபத்தில், திருநெல்வேலியில் உள்ள சிப்காட் வளாகத்தில் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) உற்பத்தி மையத்தை அமைக்க விக்ரம் சோலார் நிறுவனத்துடன் ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு கையெழுத்திட்டது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.1,000 கோடி மதிப்பிலான விரிவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும், பஜாஜ் ஆட்டோவின் புதிய உற்பத்தி ஆலை மற்றும் கனடாவின் ‘நியோ பெர்ஃபார்மன்ஸ் மெட்டீரியல்ஸ்’ நிறுவனத்தின் அரிதான காந்த உற்பத்தி மையம் ஆகியவற்றைப் பெறுவதிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இவை அனைத்துமே மேலும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.

பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிட பிரச்னையைத் தீர்த்ததே தமிழ்நாட்டின் வெற்றிக்குக் காரணம் என்கிறார் ‘தி உதையி ஃபவுண்டேஷன்’ (The Udaiti Foundation) அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பூஜா சர்மா கோயல். ஏனெனில், தங்குமிடப் பிரச்சினையாலேயே 80% பெண்கள் வேலைவாய்ப்புகளை நிராகரிக்கின்றனர். தங்குமிடங்களை வெறும் நலத்திட்டமாக பார்க்காமல் ‘பொருளாதார உள்கட்டமைப்பாக’ தமிழ்நாடு கருதுகிறது. தமிழ்நாடு உழைக்கும் பெண்கள் விடுதி கழகம் (TNWFC) 2 மாதிரிகளை வழங்குகிறது. தொழில்துறை தங்குமிடங்கள்: சிப்காட் மூலம் பெரிய விடுதி அமைப்புகள், தோழி விடுதிகள் (Thozhi Hostels) 100 முதல் 150 படுக்கைகள் கொண்ட சிறிய, உயர்தர உள்கட்டமைப்பு விடுதிகள். தற்போது இயங்கும் 19 ‘தோழி’ விடுதிகளில் 87% இடங்கள் நிரம்பியுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த விடுதிகளின் எண்ணிக்கை 46-ஆக உயரும் என கோயல் கூறுகிறார்.

‘இந்திய சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான ஆராய்ச்சி கவுன்சில்’ (ICRIER) டிசம்பர் 2024-இல் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளில் கிட்டத்தட்ட பாதியளவு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன. பாதுகாப்பைத் தவிர, இந்த விடுதிகள் வேலை செய்யும் இடத்திற்கு மிக அருகில் இருப்பது புலம்பெயர்ந்த (பெண்) தொழிலாளர்களைக் கவரவும் தக்கவைக்கவும் உதவுகிறது. இது முதலாளிகளுக்குப் போக்குவரத்து உள்கட்டமைப்புச் செலவைக் குறைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கு மாறாக, கேரளாவில் மின்னணு உற்பத்தியில் பெண்களின் வேலைவாய்ப்புப் பங்கு 2013-14 இல் 8%-லிருந்து 2023-24 இல் 6%-ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், இது ஆந்திரா (3%) மற்றும் உத்தரப் பிரதேசம் (5%) ஆகிய மாநிலங்களை விட அதிகமாகும்.

மற்ற மாநிலங்களும் தற்போது இதைப் பின்பற்ற முயன்று வருகின்றன. டிசம்பரில், கர்நாடகாவின் தேவநஹள்ளியில் உள்ள புதிய ஐபோன் அசெம்பிளி ஆலைக்காக ஃபாக்ஸ்கான் நிறுவனம் சுமார் 30,000 பேரைக் சுவீகரித்தது. இதில் 80% பேர் (சுமார் 24,000 பேர்) பெண்கள். நிறுவனம் தனது வளாகத்தில் ஏற்கெனவே உள்ள 6 விடுதிகளுடன் மேலும் பல விடுதிகளைச் சேர்த்து வருகிறது. இந்த விடுதிகள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்குவதாகவும், தொழிற்சாலைகள் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்துவதைத் தவிர்ப்பதாகவும், ஒரே மாதிரியான வேலை அலுப்பூட்டுவதாகவும் புகார்கள் உள்ளன.

சென்னையில், மாதச் சம்பளம் வாங்கும் பெண்களின் சராசரி ஊதியம் (2025 தரவுப்படி) ரூ.22,919. இது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் சராசரியான ரூ.23,707-ஐ விடக் குறைவு; மேலும் முதல இடத்தில் உள்ள பிரயாக்ராஜை விடப் பாதியளவுதான். கோவையில் பெண்களின் சராசரி ஊதியம் ரூ.19,149 ஆகவும், மதுரையில் ரூ.18,247 ஆகவும் உள்ளது. தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்தும் மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறையில்கூட, 2023-24 இல் ஒரு தொழிலாளரின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ.2.45 லட்சம் ஆகும். இது அகில இந்திய சராசரியான ரூ.2.5 லட்சத்தை விடக் குறைவு. முதல இடத்தில் உள்ள தெலங்கானாவில் இது ரூ.4.46 லட்சம் ஆகும்.

ஆனால், தமிழ்நாட்டில் ஊதிய வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட வேகமாக உள்ளது. 2013-14 மற்றும் 2023-24 இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் சராசரி ஊதிய வளர்ச்சி 83% ஆகும். இது அகில இந்திய சராசரியான 36%-ஐ விட இரண்டு மடங்கு அதிகம். டெல்லி (124%), புதுச்சேரி (115%), மத்தியப் பிரதேசம் (92%), கோவா (90%), உத்தரகாண்ட் (89%) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. சாம்சங் நிறுவனம் வெளியிட்ட பதிவன்றில், “இன்று ஸ்ரீபெரும்புதூர் பகுதியானது தரம், செயல்திறன் மற்றும் கண்டுபிடிப்புகளில் உலகளாவிய தரநிலைகளை எட்டும் உதிரிபாக உற்பத்தியாளர்களின் முன்னணி மையமாக மாறியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

பெண் தொழிலாளர்களுக்கு விடுதி வசதி செய்து கொடுத்து உற்பத்தித் துறையை விரிவுபடுத்தும் முறை சீனாவை மாதிரியாகக் கொண்டது. 2008-ல் வெளியான ‘ஃபாக்டரி கேர்ள்ஸ்’ (Factory Girls) என்ற புத்தகத்தில் எழுத்தாளர் லெஸ்லி டி. சாங் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பெரிய நகரங்களில் புலம்பெயர்ந்தோர் மக்கள் தொகையில் கால் பங்காக உள்ளனர்; தெற்கு சீனாவின் தொழிற்சாலை நகரங்களில், நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் அசெம்பிளி லைன்களை இவர்களே இயக்குகிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய புலம்பெயர்வை உருவாக்கினர். (அப்போது சீனாவில் 130 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர்). இந்த மிதக்கும் மக்கள் தொகைதான் சீனாவை உற்பத்தித் துறையின் உலக வல்லரசாக்கியது.

இந்தியாவில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் பற்றிய தரவுகள் கிடைப்பது கடினம். MoSPI-ன் 2020-21 புலம்பெயர்வு ஆய்வின்படி, நகர்ப் புற இந்தியாவில் கிட்டத்தட்ட இரண்டு பெண்களில் ஒருவர் (47.8%) புலம்பெயர்ந்தவர்; நகர்ப்புற பெண் புலம்பெயர்ந்தோரில் 54% பேர் கிராமப்புறங்களிலிருந்து வருகிறார்கள். மெட்ராஸ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவிப்பேராசிரியர் மொனாலிஷா சக்ரபர்த்தி வெளியிட்ட கட்டுரையின்படி, வேலைக்காக இடம்பெயரும் பெண்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு 12.1% பங்குடன் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா (11.8%), கர்நாடகா (7.6%), ஆந்திரா (6.8%), தெலங்கானா (6.2%) ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டிற்குப் பின்னாலேயே உள்ளன.

சென்னை பிராந்தியத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாடு மாநில திட்டக் குழு மார்ச் 2025-இல் சமர்ப்பித்த அறிக்கையில், ஆய்வு செய்யப்பட்ட 811 தொழிலாளர்களில் 86% பேர் ஐந்து மாநிலங்களைச் (பீகார், ஒடிசா, அசாம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட்) சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் (55%) உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளனர்.

Source link