நியூயார்க்: உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி எளிதாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் என்று போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர் ரொனால்டோ அதிரடியாக கணித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியனான லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இப்போட்டி இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு நடக்க உள்ளது.
இந்நிலையில், இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறப் போவது யார் என்பது குறித்து போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அளித்த பேட்டியில் கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு அணிகள் தான் இந்த உலகக் கோப்பையை வெல்லும் விருப்பமான அணிகளாக இருந்தன. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி மிக எளிதாக அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வெல்லும் என்று நான் கருதுகிறேன்.
நடப்புத் தொடரில் ஸ்பெயின் அணி ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் ஆட்டத்தை தன் முழு கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் ஒன்று அல்லது இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றுவிட்டால், அதன்பின் ஆட்டத்தை தன் வசம் கொண்டு வரும் வலிமை அர்ஜென்டினாவிடம் இல்லை. ஏனெனில், பந்து எப்போதும் ஸ்பெயின் வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும், என்று ரொனால்டோ தெரிவித்தார்.
மீண்டெழுந்த அர்ஜென்டினா – அரையிறுதியில் மிரட்டிய ஸ்பெயின்:
அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்திடம் பின்தங்கியிருந்த அர்ஜென்டினா, அதன்பின் அசாத்தியமாக மீண்டெழுந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
1962-ல் பிரேசில் அணிக்கு பின், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைத் தக்க வைக்கும் முனைப்பில் அர்ஜென்டினா களம் காண்கிறது. அதேநேரம், கடந்த 7 உலகக் கோப்பை போட்டிகளில் ஒரே ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ள ஸ்பெயின் பலத்த தற்காப்பு ஆட்டத்துடன் சவால் அளிக்கக் காத்திருக்கிறது.
