மணல் கொள்ளையைத் தடுத்தாலே ரூ.40,000 கோடி வருவாய் வரும்

தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தினாலே அரசுக்கு ரூ.40,000 கோடி அளவுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ம.க சார்பில் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அவர், தி.மு.க அரசின் தவறான நிதி மேலாண்மை மற்றும் வரி அல்லாத வருவாயில் நடக்கும் முறைகேடுகளைக் கடுமையாக விமரிசித்துப் பேசினார்.

பா.ம.க சார்பில் சென்னை, தியாகராய நகரில், தமிழ்நாட்டின் 2026-27-ம் ஆண்டிற்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வரவு செலவு மற்றும் புதிய திட்டங்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் 2026-27-ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுப் பேசியதாவது: “கடந்த தி.மு.க ஆட்சியில் பட்ஜெட் எப்படி இருந்தது, இன்றைக்கு எங்களுடைய பட்ஜெட் எப்படி இருக்கிறது என்று ஒரு ஒப்பீடு செய்துள்ளோம். தி.மு.க அரசு தாக்கல் செய்த 2025-2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சொந்த வரி வருவாய் 2 லட்சத்து 20 ஆயிரத்து 895 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிட்டு இருந்த நிலையில், அதில் கிட்டத்தட்ட 13 சதவீதம் குறைவாக 1 லட்சத்து 92, ஆயிரத்து 493 கோடி மட்டுமே வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தலைமைக்கணக்காளர் அலுவலர் தெரிவித்துள்ளார. 

பா.ம.க தாக்கல் செய்த அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நம்முடைய சொந்த வரி வருவாய் மூன்று லட்சத்து 53 ஆயிரத்து 966 கோடி இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தோம். அது இல்லாமல் 2025-26-ல் தமிழ்நாடு அரசு வரி வருவாய் அல்லாத வருவாயில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் இதில் ஊழல் செய்வதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது.

தி.மு.க அரசில் வரி வருவாய் அல்லாத வருவாய் 28 ஆயிரத்து 819 கோடி ரூபாயாக இருக்கும் இன்று நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 23 ஆயிரத்து 830 கோடி மட்டுமே வந்தது. அதில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தினாலே அதில் கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வரும். மொத்தத்தில் தி.மு.க ஆட்சியில் வரி வருவாய் அல்லாத வருவாய் 23 ஆயிரம் கோடி தான் வந்திருக்கிறது.

பா.ம.க இப்போது தாக்கல் செய்யும் 2026-27-ம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையில், வரி அல்லாத வருவாய் 2 லட்சத்து 17 ஆயிரத்து 945 கோடியாக இருக்கும். இதில் கிரானைட், தாது மணல், கனிம வளம் உள்ளிட்டவற்றின் வணிகம், ஏலத்தை முறைப்படுத்துதல், ஊழலை தடுத்தல் பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயக்கச் செய்தல் ஆகியவற்றின் மூலம் இது சாத்தியமாக இருக்கிறது.

தி.மு.க ஆட்சியில் 2025-2026-ம் ஆண்டில் மத்திய அரசின் வரி வருவாய் பங்கு 58 ஆயிரத்து 21 கோடி ரூபாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அது 56 ஆயிரம் கோடியாக கிடைத்திருக்கிறது.

அதே போல, மத்திய அரசின் மானிய உதவிகள் 24 ஆயிரத்து 837 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் 18 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் தான் கிடைத்திருக்கிறது.

பா.ம.க தாக்கல் செய்யும் நிழல் நிதி நிலை அறிக்கையில் 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரி வருவாய் பங்கு 56 ஆயிரத்து 413 கோடி ரூபாய் இருக்கும் என்று கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஒரே மாதிரி மதிப்பீடு செய்திருக்கிறோம்.

ஆனால், அதில் மானிய உதவிகள் 43 ஆயிரத்து 617 கோடியாக இருக்கும். ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசின் பங்கு சற்று குறையும்.

தி.மு.க ஆட்சியில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மொத்த வருவாய் 3 லட்சத்து 31 ஆயிரத்து 569 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வெறும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 219 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது” என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Source link