தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (24-10-26) ஆரஞ்ச் நிற அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாட்டத்தில் நேற்று இரவு முதலே இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை பாதையின் பல இடங்களில் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி செல்லும் சாலையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் மலைப்பாதைகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இன்று காலை ஊட்டியில் இருந்து பர்லியார் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்த போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் அந்த பேருந்து சிக்கி பாதியாக நொறுங்கியது. அதனைத் தொடர்ந்து பேருந்தில் 6 பேரும் பத்திரமாக வெளியே வந்துள்ளனர். தொடர்ந்து, படுகாயங்களுடன் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மீட்புக்குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த ஓட்டுநர் ஜனகராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நடத்துநருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மலை பாதைகளில் அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், பேருந்துகள் சிக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனால், ஊட்டி செல்லும் வாகனங்களை மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர் கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் இன்று (24-10-26) முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை ஊட்டி செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘கனமழையால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண் சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடுத்த 3 நாட்களூக்கு வானிலை சீராகும் வரை நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
