மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெகவை வீழ்த்த எடப்பாடி வகுக்கும் மாஸ்டர் பிளான் -பாமகவின் ஆதரவு யாருக்கு? – madurantakam by election 2026 aiadmk strategy edappadi palaniswami against tvk political move

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இணையாக 2 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் பார்க்கப்படுகிறது. தவெகவின் ஒரே குறிக்கோள் இரண்டு தொகுதிகளையும் அதிமுகவிடமிருந்து கைப்பற்றுவது. திமுக மற்றும் அதிமுகவின் லட்சியம், இரு தொகுதிகளிலும் தவெகவை வர விடாமல் காலி செய்வது.

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுமே அதிமுக வென்றவையாகும். விஜய் அலையில் கூட சிக்காமல் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக அசத்தலான வெற்றியைப் பெற்றது. மதுராந்தகத்தில் தவெக 2வது இடத்தையும், தாராபுரத்தில் 3வது இடத்தையும் பிடித்தது. அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால், பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதைத் தொடர்ந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இப்படியான சூழலில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக். 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு வகுக்க போகும் வியூகம் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம். மதுராந்தகம் அதிமுகவின் கோட்டையாகும். இதுவரை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்அதிமுக 7 முறைவெற்றுள்ளது.ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதியான மதுராந்தகத்தை மீண்டும் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. இத்தொகுதியில் வெற்றி பெறுவதன் மூலம் அதிமுகவுக்கு இரட்டை லாபம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. சொந்தத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் அதிமுக தனது அடித்தளத்தையும் செல்வாக்கையும் மீண்டும் நிரூபிக்க முடியும். தவெகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு சரிந்துவிட்டது என்பதை நிரூபிக்கும் வாய்ப்பாகவும் இது அமையும். இந்த இரட்டை லாபத்தைப் பெறுவதற்காக அதிமுக அங்கு ஒரு வலுவான வேட்பாளரைக் களமிறக்கத் திட்டமிட்டு வருகிறது.

சாதனைகளுக்கு முக்கியத்துவம்

இதற்காக எடப்பாடி பழனிசாமி தொகுதியில் செல்வாக்கு உள்ள நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தவெக அரசு மீதான விமர்சனங்களை முன்னிறுத்தி பரப்புரை செய்ய வியூகம் வகுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

மதுராந்தகம் தொகுதியில் மிக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட பிரதான சமூகமாகத் தலித் மக்கள் உள்ளனர். தலித் மக்களுக்கு அடுத்தபடியாக, வன்னியர் சமுதாயத்தினர் சுமார் 30 சதவீதம் வரை இங்கு பரவலாக வசிக்கின்றனர்.

இவர்களுடன் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் இத்தொகுதியின் முக்கியமான மூன்றாவது பெரிய சக்தியாக உள்ளனர். இவை தவிர, தெலுங்கு பேசும் நாயுடு மற்றும் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இத்தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் பரவலாக வசித்து வருகின்றனர். முதலியார் வாக்குகளை கவருவதற்காக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை பார்த்து அதிமுக ஆதரவுகேட்டுள்ளது. அதே போல், பாஜக ஆதரவுடன் தேர்தல் பிரச்சார வியூகங்களை வகுப்பதற்காக டிடிவி தினகரனுடன் பேசி உத்திகளை வகுத்து வருகிறது அதிமுக.

பாமக ஆதரவு யாருக்கு

மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமுதாய வாக்குகள் கணிசமான அளவில் இருப்பதால், அங்கு வெற்றி பெற விரும்பும் கட்சிகளுக்குப் பாமகவின் ஆதரவு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது பாமகவின் ஆதரவு அதிமுகவுக்குக் கிடைக்குமா அல்லது தவெக தனது பக்கம் இழுக்குமா என்பது முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்ததால், மீண்டும் அதிமுகவுக்கே ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பாமகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

Source link