மதுரை : மதுரையில் ஓய்வூதியப் பலன்களை பெற ஆசிரியையிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் தொடர்புடைய அரசபட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) வாசுதேவன் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். கள்ளிக்குடி வட்டாரக் கல்வி (பி.இ.ஓ.,) முத்துக்குமார் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கள்ளிக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சீனித்தாய். இவர் ஓய்வூதியப் பலன்களை பெற கள்ளிக்குடி பி.இ.ஓ., முத்துக்குமாருக்கு நேரடியாகவும், வாசுதேவன் மூலமாகவும் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் அளித்தார். லண்டனில் பொறியாளராக பணியாற்றும் ஆசிரியை மகன் சதீஷூம் அங்கிருந்து முதல்வர் தனிப் பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அளித்தார்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் விசாரணைக்கு உத்தரவிட்டார். திருமங்கலம் தொடக்கக் கல்வி டி.இ.ஓ., ரகுபதி விசாரணை நடத்தினார். இதையடுத்து வாசுதேவன் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். பி.இ.ஓ., முத்துக்குமார் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கல்வி ஒன்றியத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
