செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கிடைத்த அரைகுறைத் தகவல்களை வைத்துக்கொண்டு, மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக போலி மதுபானத் தயாரிப்பு ஆலையை நடத்திய 26 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தயாரித்த விஷச்சாராயம் காரணமாக அந்தப் பகுதியில் 13 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் சந்தனா மற்றும் பிஞ்சானா கிராமங்களில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதிக்குப் பிறகு அடுத்தடுத்து 13 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் இந்த உயிரிழப்புகளுக்கும் கள்ளச்சாராயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் மறுத்தது. இருப்பினும், தொடர்ச்சியான புகார்களை அடுத்து காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியது.
விசாரணையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஒரு பெரிய கள்ளச்சாராயக் கும்பல் செயல்பட்டது கண்டறியப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான இந்தூரைச் சேர்ந்த அஜய் ரத்தோர் (26) என்பவர், கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை வீட்டில் மது தயாரிப்பது எப்படி என்பது குறித்து ஏ.ஐ. மூலமாகவும் இணையம் வழியாகவும் தொடர்ச்சியாகத் தேடியுள்ளார்.
இதன் மூலம் கிடைத்த தகவல்களை வைத்து, இந்தூரில் உள்ள ‘ரைசிங் பிரதர்ஸ்’ என்ற (solvent) மொத்த விற்பனையாளரைத் தொடர்புகொண்டு ஆபத்தான ரசாயனம் ஒன்றை வரவழைத்துள்ளார். அக்டோபர் 1-ஆம் தேதி இந்த ரசாயனம் கைக்கு வந்ததும், தன் கூட்டாளிகளுடன் இணைந்து போலி மதுபானத்தைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.
தயாரிக்கப்பட்ட போலி மதுபானம் பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட மது பாட்டில்களில் ஊற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் அடையாளம் காண முடியாதவாறு, இந்த நச்சு மதுவை அசல் மதுபானத்துடன் கலந்து கிராமப்புறப் பகுதிகளில் விற்பனை செய்துள்ளனர். இதற்காக பாட்டில்களின் மூடியை சத்யேந்திர ஓஜா என்பவரிடம் இருந்து பெற்றுள்ளனர்.
போலீசாரின் அதிரடி நடவடிக்கை:
இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியக் குற்றவாளியான அஜய் ரத்தோர் கடந்த அக்டோபர் 26 அன்று கைது செய்யப்பட்டார். ரேசாயனம் விநியோகம் செய்த அமன் கஸ்லிவால் என்பவரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இவர்களுடன் கூட்டாளியாகச் செயல்பட்ட கோவிந்த் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரசாயனம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுபானம் மற்றும் ரசாயன மாதிரிகள் தடயவியல் சோதனைக்கு (FSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தேவாஸ் கொத்வாலி காவல் நிலையப் பொறுப்பாளர் சசிகாந்த் சௌராசியா தெரிவித்துள்ளார்.
போலி மதுபானம் குடித்ததால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என்பதை உறுதிப்படுத்த தடயவியல் சோதனை முடிவுகளுக்காகக் காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.
